புதுடெல்லி: கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழகக் காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து விசாரித்து வருகிறது. ஆனால், இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐந்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது தவெக தரப்பில், ‘சம்பவம் நடந்தவுடன் விஜய் தப்பிச் சென்றதாக அரசுத் தரப்பு கூறுவது முற்றிலும் தவறு. காவல்துறையின் பாதுகாப்புடன்தான் அவர் அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க முயன்ற எங்களைக் காவல்துறையே அனுமதிக்கவில்லை’ என வாதிடப்பட்டது.
மேலும், ‘வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத விஜய் மீது சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தது’ எனவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் தரப்பில், ‘திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாலேயே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் மூலம் சமூக விரோதிகள் கூட்டத்திற்குள் ஊடுருவினர். காவல்துறை திடீரென தடியடி நடத்தியதாலேயே மக்கள் சிதறி ஓடினர்’ எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை தரப்பில், ‘மாநிலக் காவல்துறை அதிகாரிகள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. என் மகனின் மரணத்திற்கான உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு, ‘விஜய் நண்பகல் 12 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு, இரவு 7 மணிக்கு வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம். சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம்தான் நியமித்துள்ளது. அதன் தலைவர் சிபிஐயில் பணியாற்றிய சிறந்த அதிகாரி. கள நிலவரம் தெரிந்த மாநில அதிகாரிகளே இதைச் சரியாக விசாரிக்க முடியும்’ எனத் தெரிவித்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரம்புக்குட்பட்ட இந்த வழக்கை, சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எப்படி விசாரணைக்கு எடுத்தது?. தேர்தல் பிரசார வழிகாட்டுதல் கோரிய மனு, குற்றவியல் மனுவாகப் பதிவு செய்யப்பட்டது ஏன்?’ எனவும் கேள்விகளை எழுப்பினர். இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தொடர்ந்து இவ்வழக்குகளில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையே நேற்று தங்களின் அனுமதியின்றி சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் முயற்சி என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘ கரூரில் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது தொடங்கி கூட்ட நெரிசல் நடைபெற்றதற்கு பிறகு அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது வரை நடந்த சம்பவங்கள் பல்வேறு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் தங்களது கீழ் செயல்படும் அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை என்று காவல்துறையின் மூத்த அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அவர்களை தற்காத்து உள்ளனர்.
விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை மூத்த அதிகாரிகள் காப்பாற்றும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ள நிலையில் அவர்கள் நடத்தும் விசாரணை எப்படி நியாயமுடன் நடக்கும் என்ற கேள்வி மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்தேகம் பொதுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
உள்ளூர் காவல்துறையினருக்கு எதிராக சில புகார்களை தெரிவிப்பதனால் மட்டுமே அனைத்து வழக்கின் விசாரணைகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியது என்பது தேவை கிடையாது. ஆனால் அதே நேரத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மதிப்பதை உறுதி செய்ய வேண்டியதாக இருக்கிறது அதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இதை கருதி சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறோம். அனைத்துத் தரப்பினரின் கவலைகளையும் போக்கும் வகையில், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கிறோம். இந்தக் குழுவில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத, ஆனால் தமிழகப் பிரிவில் பணியாற்றும் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
சிபிஐ தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கரூர் காவல்துறையினர் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு மற்றும் தமிழக முதல்வர் அமைத்த ஒரு நபர் ஆணையம் ஆகியவை இதுவரை விசாரித்த அத்தனை ஆவணங்களையும் கோப்புகளையும் தகவல்களையும் உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வந்த மற்ற அனைத்து விசாரணைகளும் முழுமையாக நிறுத்தப்படுகின்றது. ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையும் நிறுத்தப்படுகின்றது. மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும். இம்மனுக்களுக்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.