Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்; தெருநாய்கள் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக மோதல்: மேனகா காந்திக்கு எதிராக களமிறங்கிய தலைவர்கள்

புதுடெல்லி: டெல்லி பகுதியில் உள்ள தெருநாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தெருநாய் விவகாரத்தில், தேசிய தலைநகர் பகுதியில் (என்சிஆர்) உள்ள அனைத்துத் தெருநாய்களையும் பிடித்து, விலங்குகள் காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், நாய்க்கடி சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதும் இந்த உத்தரவுக்கு முக்கியக் காரணமாகும்.

மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தீர்ப்பு, விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் தரப்பினருக்கும் இடையே நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த நிகழ்வில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘அனைத்து விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு; டெல்லியில் உள்ள தெருநாய் சிக்கலை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்க்க வேண்டுமே தவிர, காப்பகங்களில் அடைப்பதன் மூலம் அல்ல’ என்றார். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள மேனகா காந்தி, ‘மனிதர்களும் நாய்களும் 25,000 ஆண்டுகளாக இணைந்து வாழ்கின்றனர். குடியிருப்போர் நலச் சங்கங்களே வன்முறையைத் தூண்டுகின்றன. தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே நிரந்தரத் தீர்வாகும்’ என்று கூறியுள்ளார்.

மறுபுறம், ஒன்றிய முன்னாள் அமைச்சர் விஜய் கோயல் மற்றும் டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தெருநாய்களை அப்புறப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விஜய் கோயல், ‘தினமும் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கடிக்கும் 10 லட்சம் தெருநாய்களை நிர்வகிப்பது எப்படி என்பதே உண்மையான சிக்கல். இது மனிதாபிமானத்திற்கும், தெருநாய்களின் அன்பிற்கும் இடையிலான போராட்டம். பசு யாரையும் கடிப்பதில்லை; ஆனால் பசு வதை குறித்து இந்த தொண்டு நிறுவனங்கள் ஏன் பேசுவதில்லை?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்வைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களையும் ஒன்றிணைத்துப் மாபெரும் பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தெருநாய்கள் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மேனகா காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்த போதிலும், டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா உள்ளிட்ட டெல்லி பாஜக தலைவர்கள் விஜய் கோயலின் வாதத்தில் அதிக நியாயம் இருப்பதாகக் கருதுகின்றனர். முன்னதாக, விஜய் கோயல் தெருநாய்கள் தொடர்பாகப் போராட்டம் நடத்தியபோது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.