புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது சகோதரர் இமானுவேல் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற முந்தைய உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்நோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்னதாக இந்த விவகாரத்தின் வழக்கு விசாரணையின் போது சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஏற்றுக்கொண்டதா என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர்,\\” இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏனெனில் ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டார்கள். எனவே இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. இந்த வழக்கில் முன்னதாக சிலர் ஜாமீன் பெற்றுள்ளனர். அவர்களையும் காவல்துறை தரப்பில் தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைத்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இமானுவேல் ஆம்ஸ்ட்ராங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, ”இந்த வழக்கில் காவல்துறையினர் சரியான விசாரணையை மேற்கொள்ளவில்லை. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு பிறகும் ஆவணங்களை காவல்துறை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்து காலதாமதம் செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” இந்த வழக்கை பொருத்தமட்டில் நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்திற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருப்பினும் ஒவ்வொரு வழக்கையும் இப்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கேட்பதையும் ஏற்க முடியாது. அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.
இதனை உயர்நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக சிபிஐ விசாரணை கேட்பதை ஒருவித கலாச்சாரமாகவே மாற்றி உள்ளீர்கள். ஏற்கனவே இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகு சிபிஐ விசாரணைக்கு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது ஏன்? இது ஒரு சரியான நடவடிக்கை கிடையாது என்று காட்டமாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,\\” இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் ஏற்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முன்னதாக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட இமானுவேல் ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர், ”சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்த ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தான் அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் இப்போது நீங்களே அந்த உத்தரவை மாற்றி அமைக்கலாமா. எனவே இந்த விவகாரத்தில் முந்தைய உத்தரவை மாற்ற கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அப்போது கோபமாக குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இது உச்ச நீதிமன்றம் என்பதை நினைவில் வைத்து பேசுங்கள். குரலை உயர்த்தி பேசாதீர்கள். நாங்களும் சில நேரங்களில் தவறு செய்ய நேரிடும்.
நூறு சதவீதம் சரியாக இருக்கிறோம் என்று எப்போதும் நாங்கள் கூறியது கிடையாது. அதாவது சில நேரங்களில் வழக்கை விரிவாக ஆய்வு செய்து அதற்குப் பிறகு தான் வழக்குகளில் முடிவுவெடுக்க வேண்டி நிலை இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது இந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்த பிறகு தான், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையை விதித்திருக்கிறோம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் ஏதாவது இருந்தால் அதையும், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று அனுமதி வழங்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
* சிபிஐ விசாரணை கேட்பது ஒருவித கலாச்சாரமாகவே மாற்றப்பட்டுள்ளது.
* எல்லா வழக்குகளையும் சிபிஐ விசாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.
* இதை உயர்நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.


