உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை: உரிய மனுவை தாக்கல் செய்து அனுமதி பெறலாம்
சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘இதுதொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துக்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பது வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது என்பது மட்டுமில்லாமல், உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அதனை கருத்தில் கொண்டு தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று கூறினார்.
இதையடுத்து அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ராம்சங்கர் ஆகியோர்,‘‘செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கியதாக கூறலாம். ஆனால் அது தொடர்பாக எந்த ஒரு வார்த்தையோ அல்லது கருத்தோ உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவில் இடம்பெறவில்லை என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ‘‘இந்த வழக்கு விவகாரத்தில் தற்போது சில விளக்கங்களை சேர்ப்பதன் மூலம் நீங்கள் அந்த உத்தரவையே திருத்தி அமைக்க கோரிக்கை வைக்கிறீர்கள். அது கண்டிப்பாக ஏற்புடையது கிடையாது என்று கூறினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘‘செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது என்று நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் அதற்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை. இதில் அவர் எப்போது அமைச்சராக விருப்பப்படுகிறாரோ, அப்போது உரிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதற்கான அனுமதி பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள்,‘‘வேலைக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஏன் டெல்லிக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று கேட்டார்.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ,‘‘அப்படி செய்தால் தற்போது இருக்கும் நிலையில், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். ஏனெனில் மாநிலத்தில் விசாரணை என்பது சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக திடீரென வழக்கின் விசாரணை மாற்றப்பட்டால், நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தினமும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. எனவே வழக்கை வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்து நாள்தோறும் விசாரணை மேற்கொண்டால் சரியாக இருக்கும் என உத்தரவிடலாமா என்பது எங்களது தரப்பின் முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது உட்பட அனைத்து விவரங்களுக்கும் மனுதாரர்கள் ஒய்.பாலாஜி, வித்யா குமார் மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அதேப்போன்று செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துக்களை நீக்கக்கோரிய மனுவை மட்டும் வாபஸ் பெற அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.