கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கோழிகளை வேட்டையாடியதற்காக பல நாய்களுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது விலங்கு ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், கருத்தடை செய்யப்பட்ட நாய்களை அவை இருந்த இடத்திற்கே திரும்ப விட வேண்டும் என்றும், வெறிபிடித்த மற்றும் ஆக்ரோஷமான நாய்களை மட்டுமே காப்பகங்களில் வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
மேலும், தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பதற்கு நாடு தழுவிய தடையும் விதிக்கப்பட்டது. இந்த பின்னணியில், மேற்குவங்க மாநிலம், அசன்சோலில் உள்ள ஹிராபூர் காவல் நிலையப் பகுதியில் பல நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் சாலையோரத்தில் கிடப்பதாக உள்ளூர்வாசிகள் கண்டறிந்துள்ளனர்.
நள்ளிரவில் விஷம் கலந்த உணவு நாய்களுக்கு வைக்கப்பட்டதாக விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். உள்ளூர்வாசி ஒருவரின் வீட்டுக் கோழிகளை நாய்கள் வேட்டையாடியதால், பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயல் நடந்திருக்கலாம் என உள்ளூர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில நாய்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பல நாய்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.