கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் என பலகட்ட விசாரணையை முடித்தனர். இதைதொடர்ந்து அடுத்தகட்டமாக நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் சிபிஐ விசாரணை செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கொண்ட மூவர் கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டதால் கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் கரூர் பயணியர் மாளிகையில் உள்ள சிபிஐ தற்காலிக அலுவலகத்துக்கு கண்காணிப்பு குழுவை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் இன்று காலை 10.10 மணிக்கு காரில் வந்தார். இதையடுத்து சிபிஐ அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளிடம் இதுவரை நடந்த விசாரணை குறித்து சுமித் சரண் கேட்டறிந்தார். மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் சுமித் சரண் ஆலோசனை நடத்தினர்.

