புதுடெல்லி: கடந்த 25ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதன் முடிவில் மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய சட்டத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் மற்றும் ஒன்றிய அரசு ஆகியோர் ஒப்புதல் வழங்கி இருந்தனர்.
இதையடுத்து நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதால், முழு பலத்துடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.