Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விவகாரம் என்பதால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக கூறி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென கடந்த மாதம் 21ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஒன்றிய அரசு மறுப்பதால் தினமும் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும் இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.

அப்போது அவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: எந்தவொரு விஷயத்திலும் விவாதம் நடத்த அரசு திறந்த மனதுடன் உள்ளது. ஆனாலும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் எந்தவொரு விவாதமும் அரசியலமைப்பு விதிகளின்படியும், மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தையில் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படியும் இருக்க வேண்டும். பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அவையை முடக்கி வருகின்றனர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரத்தில் விவாதம் நடத்த முடியாது.

மேலும், இந்த பிரச்னை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. தேர்தல் ஆணைய அதிகார வரம்பிற்குள் வரும் விஷயங்களை இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் இந்த அவையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே அவையை சீர்குலைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமான மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல, மாநிலங்களவையும் காலையில் தொடங்கி அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* விவாதம் நடத்த வேண்டுமென இந்தியா கூட்டணி வலியுறுத்தல்

நாடாளுமன்றம் முடங்கியதைத் தொடர்ந்து விஜய் சவுக்கில் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது. ஆனால் அரசு விரும்பவில்லை. தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமை திருடப்படுகிறது. சிறுபான்மையினர், தலித்கள், ஆதிவாசிகள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இதனால்தான் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்’’ என்றார். திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில், ‘‘அவையை செயல்பட விடாமல் செய்வது ஆளும் கட்சிதான். ஆனால் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறது. இந்த ஜனநாயகக் கோயிலின் மீது முழு நம்பிக்கை வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

* நீதிபதிகளைத் தவிர எதையும் விவாதிக்கலாம்

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட போது அவர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் சிங்கிற்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், ‘‘கடந்த 2023 ஜூலை 21ம் தேதி அன்று அவையின் தலைவர், ‘இந்த கிரகத்தின் அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்த அவையில் விவாதிக்கலாம். ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியையும் நீக்கக் கோரும் விவகாரத்தில் மட்டும் தலையிட முடியாது என முன்னாள் அவைத்தலைவர் கூறி உள்ளார். எனவே அதன் அடிப்படையில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

அமளிக்கு மத்தியில் 2 மசோதா நிறைவேற்றம்

* மக்களவையில் அமளிக்கு இடையே வணிகக் கப்பல் மசோதாவும், மாநிலங்களவையில் அமளிக்கு இடையே கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்லும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டன.

* மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தேசிய விளையாட்டு நிர்வாகம் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு அனுப்ப சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

* நேற்று காலை அவை தொடங்குவதற்கு முன்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பீகார் விவகாரம் தொடர்பாக பதாகைகள் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

* தேர்தல் சீர்த்திருத்தம் குறித்து விவாதிக்கலாமா?

நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த அரசு முன்வர வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் பதில் தரப்படவில்லை. இதற்கு முன் தேர்தல் ஆணைய விவகாரங்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.