மதுரை: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஆக. 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு டிஜிபியாக நியமிக்க வேண்டிய தகுதியானவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை அனுப்பவில்லை.
சங்கர் ஜிவாலை அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யவோ அல்லது வேறு யாரையாவது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை கொண்டு அடுத்த டிஜிபிக்கான தகுதியான நபரை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி ஒன்றிய உள்துறை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையை உடனடியாக துவங்குமாறும், தற்போதைய டிஜிபி ஓய்வு பெற்ற பின், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ, பொறுப்பு டிஜிபியை நியமிக்கவோ கூடாது என்றும் இதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘புதிய டிஜிபி நியமன நடைமுறை துவங்கப்பட்டுள்ளதா, இல்லையா?
டிஜிபி நியமனம் குறித்த வழக்கு மதுரை கிளையில் நிலுவையில் இருந்ததை ஏன் சென்னை தலைமை நீதிபதி அமர்வில் அரசு தரப்பில் கூறவில்லை? உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் டிஜிபி நியமனம் குறித்து வழிமுறைகளை வகுத்துள்ளது. அதனை ஏன் நிறைவேற்றவில்லை? எனவே, டிஜிபி நியமனத்திற்கான பணிகள் துவங்கியதா, இல்லையா என்பது குறித்து உள்துறை செயலரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ எனக்கூறி விசாரணையை மதியத்திற்கு ஒத்திவைத்தனர்.
பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘புதிய டிஜிபி நியமனத்திற்கான பணி துவங்கியதாக உள்துறை ெசயலர் கூறியுள்ளார்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘டிஜிபி நியமனத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி டிஜிபி நியமனம் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றப்படாவிட்டால், மனுதாரர் டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம்’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.