புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 24ம் தேதி தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, வழக்கமான நடைமுறையின்படி, தனக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி சூர்ய காந்தின் பெயரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்கிறார். அவர் வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தன்னுடைய அதிகாரங்களின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.புதிய தலைமை நீதிபதிக்கு என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
* அரியானாவின் முதல் தலைமை நீதிபதி
அரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ம் ஆண்டு பிறந்த நீதிபதி சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2019ம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த், நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை வகிக்க உள்ள அரியானாவை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
  
  
   
