Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக முதல்வர் மனைவிக்கு எதிரான மனு நிராகரிப்பு அரசியல் யுத்தத்துக்கு ஈடியை பயன்படுத்துவதா?: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பெங்களூரு: மைசூரு நகர வளர்ச்சி குழுமம் சட்டவிரோத சொத்து பகிர்வு குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு எதிராக தொடங்கப்பட்ட பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை இயக்குனரகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் அரசியல் யுத்தத்துக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா? என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மைசூரு நகர வளர்ச்சி கழகம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததில், பண பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி மற்றும் மாநில நகரவளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது.

அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி பார்வதி மற்றும் பைரதி சுரேஷ் ஆகியோர் கர்நாடக உயரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடந்தது.

வக்கீல்கள் வாதம் முடிந்தபின் கடந்த மார்ச் 7ம் தேதி நீதிபதி வழங்கிய தீர்ப்பில், மனுதாரருக்கு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத்சந்திரா ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க இயக்குனரகம் சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி வாதம் செய்தார். அப்போது மூடா வழக்கில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பதால், விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, எங்கள் வாயை கிளறினால், அமலாக்கத்துறைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய நிலை வரும். மகாராஷ்டிராவில் எனக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டது. இது போன்ற அத்துமீறல்களை நாடு முழுவதும் நிகழ்த்த முயற்சிக்க வேண்டாம். தேர்தலில் வாக்காளர்கள் முன் அரசியல் யுத்தங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசியல் யுத்தங்களில் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுவது ஏன்? இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி, அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.