ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை: சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை
புதுடெல்லி: காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பிரபலமான சில ஸ்டான்ட் அப் காமெடியன்கள், ஆன்லைன் தளங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மோசமாக கேலி செய்வதாக தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி ரீதியாக மோசமான கருத்தை தெரிவிப்பதை குற்றமாக்க எஸ்சி, எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பது போல, மாற்றுத்திறனாளிகள், அரிய மரபணு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்வோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் தளங்களில் ஆபாசமான, புண்படுத்தும் அல்லது சட்டவிரோத கருத்துகள் தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த நடுநிலையான, சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரபல ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்துவர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிதி திரட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

