குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதை தடுக்க தேச பாதுகாப்பு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: விசாரணை தாமதத்தை காரணம் காட்டி குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதை தடுக்க, நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதனால், விசாரணைக் காலம் நீள்வதையே காரணமாகக் காட்டி, கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களும், தேசத்திற்கு எதிரான குற்றவாளிகளும் எளிதில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்கின்றனர்.
இந்த ஜாமீன் வழக்குகளைத் தவிர்க்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, ‘விரைவான விசாரணை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அமைப்பு ரீதியான தாமதங்களால் அந்த உரிமையை சமரசம் செய்ய முடியாது,’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, சிறப்புச் சட்டங்களின் கீழ் பதியப்படும் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க, நாடு தழுவிய நிரந்தர கட்டமைப்பை (சிறப்பு நீதிமன்றம்) உருவாக்குவதோடு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தற்போதுள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது மட்டும் போதாது; போதுமான எண்ணிக்கையில் சிறப்பு மற்றும் பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களில், சிறந்த நற்பெயரும், நம்பகத்தன்மையும் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம். தேவையான உள்கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்படுத்தித் தந்தால், ஆறு மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்க நீதிமன்றங்கள் இரவு பகலாக செயல்படத் தயாராக உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, ஆன்லைன் மூலம் வாக்குமூலம் பெறுவது, தேவையற்ற சாட்சிகளின் பட்டியலைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உயர் மட்டத்தில் பரிசீலித்து வருவதாக உறுதியளித்தார்.


