உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவதூறு சாதிய வன்மத்துடன் ஏஐ வீடியோ வைரல்: அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு
மும்பை: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறித்து சாதிய வன்மத்துடன் சித்தரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு காணொலியைப் பரப்பிய மர்ம நபர்கள் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்றதும், ‘சனாதன தர்மம்’ குறித்து முழக்கமிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வழக்கறிஞர் மீது உச்ச நீதிமன்றம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என முடிவு செய்திருந்த நிலையில், தலைமை நீதிபதியின் தாயாரும், சகோதரியும், ‘இந்த செயல் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’ என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே தற்போது, தலைமை நீதிபதி கவாய் குறித்து ஆட்சேபனைக்குரிய, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
சாதிய வன்மத்தைத் தூண்டும் வகையில், தலைமை நீதிபதி கவாயின் முகத்தை நீல நிறத்திலும், கழுத்தில் மண்பானை தொங்குவது போலவும் சித்தரித்து, குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்தும் வகையில் அந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நவி மும்பை காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர் மற்றும் பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இணையவழிக் குற்றப் புலனாய்வு வல்லுநர்களின் உதவியுடன், ஐபி முகவரிகளைக் கொண்டு இந்த காணொலியை முதலில் உருவாக்கிய மர்ம நபர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.