Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சுப்ரீம்கோர்ட் அதிரடி

பீகார் மாநிலத்தில் நவ.6 மற்றும் நவ.12ம் தேதி என இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவே ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளது.

காரணம் சார்(SIR)... அதாவது, Special Intensive Revision எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. இதன்படி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்யப்பட்டதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளை திருடும் பாஜவின் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் உதவுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு எதிராக பீகார் மாநிலத்தில் சிறப்பு யாத்திரையும் மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல், கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார்.

* மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான இடைவெளியில் ஒரு கோடி வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

* ஒரே வாக்காளர், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா தொகுதி, கிழக்கு லக்னோ, மும்பை கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதி என மூன்று முகங்களாக மாறி வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

* 90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங். 60 இடங்களை பெற்று ஆட்சி அமைக்குமென கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. மாநிலத்தில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஆனால், பாஜ பெரும்பான்மை தொகுதியை வென்றது.

* 2024 மக்களவை தேர்தலில் பாஜ 33 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 25 இடங்களை வென்றதில் மோசடி நடந்துள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இறுதி பட்டியலில் 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்களா? அல்லது புதிதாக சேர்க்கப்பட்டவர்களா என்பது தெரியவில்லை. ஆனால் இறுதி பட்டியல் வெளியிடும்போது மேலும் 3.66 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர் என சிங்வி வாதிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், நீக்கப்பட்டவர்களின் தரப்பில் புகாரில்லை. பீகாரில் தேர்தல் பணிகள் துவங்கி விட்டன. மீண்டும் வாக்காளர் பட்டியல் விவகாரங்களை ஆராய முடியாது. தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் தேர்தலை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் என்கிற பொது ஜனநாயக நடவடிக்கையில், குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் கட்டாயம் தெளிவுப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், யாருக்கெல்லாம் தகவல் தெரிவிக்கப்படவில்லையோ அவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை நாளைக்குள்(அக்.9) தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நாளைக்குள் நீக்கியவர்கள் தொடர்பான விபரங்களை கேட்டுள்ளதால், பீகார் மாநில தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.