தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் கலாச்சாரம் அதிகரிப்பு : உச்சநீதிமன்றம் கவலை
மும்பையில் நடந்து வரும் நகைகள் மற்றும் ஆக்ஸ சரிஸ்களுக்கான கண்காட்சியில் இந்த வருடம் இந்தியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியப் பிரபலங்கள் கழுத்தில் அணிந்து வந்த பாம்பு வடிவ நகைகள். அதிலும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இந்த பாம்பு நெக்லஸில் காட்சி கொடுத்தனர். உலக கோடீஸ்வரர்களின் நகைப்பெட்டிகளையும் அவர்கள் கழுத்தையும் மட்டுமே அலங்கரித்த இந்த நகைகள் தற்போது இந்திய மார்க்கெட்டிலும் கால் பதித்துள்ளனர். இதென்ன பாம்பு நகைகள், யாருடைய டிசைன் எனத் தேடினால் வரலாறு நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறது.
சோதிரியோஸ் வூல்காரிஸ்… 1857ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் பரமிதியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை வெள்ளி ஆபரணங்கள் வடிவமைக்கும் பணியாளர். சிறுவயதில் இருந்தே சோதிரியோஸ் தந்தையுடன் சேர்ந்து நகை செய்வதைக் கற்றுக்கொண்டார். வெள்ளி வேலைகளில் சிறிய கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்பது அவரது வாழ்க்கையின் ஆரம்பம். சிறு வயதிலிருந்தே அவருக்கு கலை, அழகு, வடிவமைப்பு இவற்றில் தீவிரமான ஆர்வம் இருந்தது.
திடீரென கிரீஸில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டன. இதனால் சோதிரியோஸின் சிறிய தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் அவர் தனது பிறந்த நாட்டை விட்டுவிட்டு புதிய வாய்ப்புகளைத் தேடி இத்தாலிக்குப் புறப்பட்டார். தன்னிடம் இருந்த சிறிய பணம், பெரிய கனவு - அவைதான் அவரது மூலதனம்.1880களில் அவர் இத்தாலியின் ரோம் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு சிறிய கடையைத் தொடங்கி வெள்ளி ஆபரணங்களை விற்றார். அவரது வேலை களில் இருந்த நுணுக்கம் மற்றும் தனித்துவம் காரணமாக வாடிக்கையாளர்கள் விரைவாகவே அதிகரித்தனர். ரோமின் மக்கள் அவரது கைத்திறனை ரசித்து, அவரின் ஆபரணங்களை பெருமை யுடன் அணிந்தனர். இதன்மூலம் சோதிரியோஸ் தன்னுடைய வாழ்நாள் கனவு எட்டும் தூரத்தில் இருந்தது.
1884ஆம் ஆண்டில் அவர் ரோம் நகரிலேயே தனது முதல் நகைக்கடையை நிறுவினார். தனது குடும்பப் பெயரான “Voulgaris” என்பதிலிருந்து “Bulgari” என்ற பெயரை உருவாக்கி பிரத்யேக ஆடம்பர நகை பிராண்டாக உருவாக்கினார். இதுவே இன்று உலகப் புகழ் ‘‘ புல்காரி’’ .சோதிரியோஸ் வடிவமைத்த நகைகள் வித்தியாசமானவை. மணிக்கம், மரகதம், ரத்தினங்களை மிகச் சுலபமாக தனது நகைகளில் இணைத்து வடிவமைத்தார். ரோமானிய கலை மற்றும் நவீனம் இணைந்த அவரது வடிவமைப்புகள் புல்காரியின் தனிச்சிறப்பாக மாறி அரச குடும்பங்களின் பாரம்பரிய நகைப் பட்டியலில் இணையத் துவங்கின. அழகுக்கான நகையாக இருந்த புல்காரி ஒரு கட்டத்தில் அந்தஸ்த்தின் அடையாளமாக மாறியது. காலப் போக்கில் இந்த நகை அணிந்தால் அவர் கோடீஸ்வரர் எனச் சொல்லவே வேண்டாம், நகை முந்திக்கொண்டு சொல்லும் நிலைக்கு புல்காரி பிராண்ட் வளர்ச்சியடைந்தது. அவரது மகன்களும் பின்னர் இந்த தொழிலைத் தொடர்ந்தனர். அவர்கள் புல்காரியை ஒரு சிறிய கடையிலிருந்து உலகம் முழுவதும் பரவிய பிராண்டாக மாற்றினர். புல்காரி தற்போது நகைகளுடன் கைக்கடிகாரங்கள், வாசனைத் திரவியங்கள், பைகள், மற்றும் லக்ஷுரி ஹோட்டல்கள் வரை விரிந்துள்ளது.
சோதிரியோஸ் வூல்காரிஸ் 1932 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் அவர் உருவாக்கிய புல்காரி நிறுவனம் இன்னும் அவர் பெயரை உலகம் முழுக்க எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. அது வெறும் நகை விற்பனை நிறுவனமாக அல்லாமல், கலை, அழகு, பாரம்பரியம் ஆகியவற்றின் இணைச்சின்னமாக திகழ்கிறது.ஒரு கிராமத்து சிறுவன் தனது கைவினை திறமையையும் கனவையும் கொண்டு உலகப் புகழ் பெற்ற பிராண்டை உருவாக்கிய கதை இது. அதில் இந்த பிராண்ட் உருவாக்கிய பிரத்யேக டிசைன் தான் பாம்புகளை மையமாகக் கொண்ட நகைகள், வாட்ச்கள். இதற்கு செப்ர்ன்டி கலெக்ஷன் எனப் பெயரிட்டுள்ளது புல்காரி. “Serpenti” என்றால் லத்தீன் மொழியில் பாம்பு. புல்காரி பாம்பை வெறும் ஒரு உயிரினமாக பார்க்காமல் மாற்றம், புதுப்பிப்பு, மற்றும் நிரந்தர அழகு என்பவற்றின் சின்னமாகப் பார்த்தனர். பொதுவாக மற்ற விலங்குகளை அதன் தோற்றம் வைத்து அதன் வயதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பாம்புகளை குறிப்பிட்ட நிபுணர்கள் தவிர பொதுவான மக்களால் வயதான பாம்பு இது என அடையாளம் காணமுடியாது. எனவேதான் பாம்பை சிறந்த அழகுக்கு ஒப்பிடுவர். பாம்பு தோலை மாற்றுவது போல, மனிதனும் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறான் என்ற எண்ணமே இந்த வடிவமைப்பின் அடிப்படை சிந்தனை. செர்பண்டி நகைகள் 1940களில் அறிமுகமானது.
அந்த காலத்திலிருந்தே புல்காரி பிராண்ட் பாம்பின் வடிவத்தை நகை களில் கலைநயத்துடன் வடிவமைத்தது. தங்கம், வைரம், எமரால்ட், ரூபி போன்ற விலைமதிப்புள்ள கற்கள் சேர்த்து, பாம்பின் நெளிவை ஒத்த வகையில் வளையல்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் என உருவாக்கப்பட்டன. இவற்றில் செர்பண்டி வாட்ச் (Serpenti Watch) உலகப் புகழ் பெற்றது. பாம்பின் உடல் வடிவில் சுருண்டு இருக்கும் கடிகாரம் ஃபேஷன் அடையாளச் சின்னமாக மாறியது. செர்பண்டி நகைகள் பெண்களின் தன்னம்பிக்கையையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. பாம்புகளை நகைகளாக அணியும் வழக்கம் கிளியோபாட்ரா அரசியிடம் மட்டுமே இருந்தது. எனவேதான் அவர் இன்றும் உலகின் தலைசிறந்த பெண்ணாக கொண்டாடப்படுகிறார். இது ஒரு நகை மட்டுமல்ல - “தான் யார் என்பதைக் காட்டும் கலை வடிவம்” என்கின்றனர் புல்காரி வடிவமைப்பாளர்கள்.
இன்றும் புல்காரியின் Serpenti கலெக்ஷன் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. பிரபல நடிகைகள் Zendaya, Priyanka Chopra, Anne Hathaway போன்றோர் Serpenti நகைகளை விரும்பி அணிகிறார்கள். இந்த பாம்புகளை சொந்தமாக்க வேண்டுமானாலும் குறைந்த பட்சம் ஒரு எளிமையான வடிவ மோதிரத்திற்கு கூட ரூ. 2,00,000 செலவிட வேண்டும். இதில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அணிந்திருக்கும் நகைகள் ரூ.2 கோடி மதிப்பு உடையவை. தற்போது இந்த நகைகள்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு இந்த நகை வாங்க வேண்டுமாயின் வெளிநாடுகளில்தான் சாத்தியம். ஆனால் இனி இங்கேயே வாங்கலாம் என தனது கிளையை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் புல்காரி நிறுவனம்.
- ஷாலினி நியூட்டன்

