டெல்லி : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமான நடைமுறையின் படி, ஆளுநர் மசோதாவை ஒப்புதலளிக்கவோ அல்லது விளக்கத்திற்காக திருப்பியனுப்பவோ வேண்டும். ஆனால், ஆளுநர் ரவி அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் வகையில் அனுப்பி வைத்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாகளை தமிழ்நாடு ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கூட தமிழக அரசு, ஆளுநர் பல மசோதாக்களை ஒப்புதல் இன்றி தாமதப்படுத்தி வருவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைக்கக் கூடாது என்று தெளிவாக கூறியிருந்தது.