டெல்லி : உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது குற்றவியல் நீதியை தவறாக பயன்படுத்துவதாகும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர். மகாதேவன் அமர்வு அளித்த தீர்ப்பில், "பாலியல் வன்கொடுமை கொடூரமான குற்றம் என்பதால், அது உண்மையான பாலியல் வன்முறை அல்லது ஒப்புதல் இல்லாத சூழல்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரரான ஆணுக்கும், புகார்தாரரான பெண்ணுக்கும் முழு சம்மதத்துடன் 3 ஆண்டுகள் உறவு இருந்துள்ளது. இந்த உறவு சில காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போனதால் அந்த உறவின்போது நிகழ்ந்த உடலுறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. இத்தகைய வழக்குகளை தொடர அனுமதிப்பது நீதிமன்ற அமைப்பை தவறாக பயன்படுத்துவதாகும். முறிந்த அல்லது தோல்வியுற்ற உறவுகளுக்கு குற்றவியல் சாயம் பூசப்படும் போக்கு கவலையளிக்கிறது. தோல்வியுற்ற ஒவ்வொரு உறவையும் பாலியல் வன்கொடுமை குற்றமாக மாற்றுவது அந்த உண்மையான குற்றத்தின் தீவிரத்தை குறைக்கும். இத்தகைய வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அழியாத களங்கத்தையும், அநீதியையும் ஏற்படுத்தும்." என்று கூறி பாலியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


