காசோலை மோசடி வழக்கில் சமரசம் ஏற்பட்டால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: காசோலை விவகாரத்தில் பல்வேறு சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காசோலை மோசடி வழக்கில் புகார் தெரிவித்த நபருக்கும், காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் பேசி சமரச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம், ‘‘சமரச ஒப்பந்தத்தை நிராகரித்தது மட்டுமில்லாமல், காசோலை மோசடியில் ஈடுபட்ட நபருக்கான தண்டனையை விதித்து உறுதி செய்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில்,‘‘காசோலை மோசடி என்பது ஒரு சிவில் குற்றமாகும். இதன் தவறுகளின் கீழ் பிரச்சனை செய்த மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இடையே பிரச்சனையை சரி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் என்பது சட்டங்களால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு தொடுப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்போ வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இடையில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டு குற்றத்தை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டால், அதனை நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும். மேலும் அதுபோன்று கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்படும் முடிவுகளின் மீது நீதிமன்றங்கள் தங்களது சொந்த விருப்பத்தை திணிக்க முடியாது. அதேப்போன்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன் வழக்கில் நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.