Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதரவாளர்கள் விலகிப்போவதால் விரக்தியில் இருக்கும் கெடு போட்ட கோட்டையாரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோட்டையானவரின் பதவி பறிபோனதும் பதவி வாங்கிக் கொடுத்தவர்களில் பாதி பேர் தொடர்பு எல்லைக்கு வெளியிலதான் இருக்காங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஒருங்கிணைந்த இலைக்கட்சியை உருவாக்குவதற்காக கோட்டையானவர் தன்னுடைய மனதை திறந்ததோடு தலைமைக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். கெடு முடிய இன்னும் 2 நாள் தான் பாக்கி இருக்கு.. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தன்னோடு நெருக்கமான ஆதரவாளர்களோடு வீட்டில் ஆலோசனை நடத்தினாராம்.. அப்போது தொண்டர்களின் மனநிலையை தான் பிரதிபலித்தேன்.

ஆனா தொண்டர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் வரலையேன்னு ஆதங்கப்பட்டாராம்.. அதோடு மனம் திறப்பதற்கு முன்பு வரை என்னுடைய நிலைப்பாட்டிற்கு கடைசி வரை ஆதரவாக இருப்போம்னு சொன்ன சில மூத்த நிர்வாகிகளும் மவுனமா இருப்பது கோட்டையானவரை மிகவுமே வருத்தமடைய செய்திருக்கிறதாம்.. எதிர் முகாம்களில் இருக்கிறவங்க கூட தொடர்பு கொண்டு என்னுடைய தைரியத்தை பாராட்டினாங்க..

ஆனா உட்கட்சியில இருந்து எந்த பாராட்டும் வரலையேன்னு சொன்னாராம்.. இணைப்பு போர்க்கொடி தூக்கிய பிறகு உள்ளூரில் அவர் நியமித்த நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்ட போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக பதில் வந்ததாம்.. எத்தனை பேருக்கு நான் பதவிகளை வாங்கி கொடுத்திருக்கிறேன். ஆனா என்னோட பதவி பறிபோனதும் நான் பதவி வாங்கி கொடுத்தவங்களில் பாதி பேர் கூட எனக்கு ஆதரவா இல்லைன்னு சொல்லி நெருக்கமானவர்கள் கிட்ட புலம்பி தள்ளியதோடு எல்லாவற்றிக்கும் காலம்தான் பதில் சொல்லும் என அவருக்கு பிடித்த பஞ்ச் டயலாக்குடன் முடித்தாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யூனியன் பிரதேச மலராத மாஜி போட்ட முடிச்சு தோல்வியில் முடிந்ததால் புலம்பி தள்ளுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தை ஒட்டிய யூனியன் பிரதேசத்தில் மலராத கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் தேர்தல் பணத்தை ஸ்வாகா செய்ததாக புகார் எழவே பதவியில் இருந்து கடந்த பொதுத்தேர்தல் முடிந்த கையோடு பதவியில் இருந்து பந்தாடப்பட்டார்.. அதன்பிறகு சைலண்ட் மோடில் பள்ளித் தொழிலை கவனித்து வந்தர், தற்போது மீண்டும் அரசியல் சேட்டைகளை ஆரம்பித்துள்ளாராம்..

மலராத கட்சியை பாடுபட்டு வளர்த்ததாக மார்தட்டிய அவர், தற்போது அக்கட்சிக்கு முழுக்கு போட்டுட்டு வெளியேறி உள்ளாராம்.. ஏற்கனவே மலராத கட்சிக்குள் பல்வேறு கோஷ்டி பூசல்கள் நீடித்து வரும் நிலையில் தனது ஆதரவாளர்களையும் படிப்படியாக வெளியேற்ற முடிச்சுகள் போட்டாராம்.. மேலும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளையும் தன்பக்கம் திருப்பி மலராத கட்சிக்கு எதிராக புதுகோஷ்டியை உருவாக்க நினைத்தாராம்..

ஆனால் பலர் பிடிகொடுக்காமல் நழுவுவதால் தனது அடுத்த பெருந்திட்டம் தோல்வியில் முடிந்து விடுமோ என ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனியில் இருந்து வந்தவரின் நடவடிக்கையால் சேலத்துக்காரர் ஊரில் இலைக்கட்சிக்காரங்க விம்முறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்கான வேலையில் தொண்டர்கள் ஈடுபட்டுக் கிட்டிருக்காங்களாம்.. வேலையில் சுணக்கம் காட்டுவோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வர்றாங்களாம்..

அதே ேநரத்தில் ஒரு பூத்துக்கு 9 பேர் கொண்ட குழு போடப்பட்டிருக்காம்.. அவர்கள் வீடு வீடாக சென்று கட்சியில் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இருப்போர் இருக்கிறார்களா, அவர்களை எவ்வாறு அணைத்துக்கொண்டு வருவது போன்ற பணியை செய்யவேண்டுமாம்.. மாநகரை பொறுத்தவரையில் வேலைக்கு சென்று கூலி வேலை செய்பவர்கள் அதிகமானோர் இருக்காங்களாம்.. வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் இருப்போரை கட்டாயமாக வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக கட்சிக்காரங்க வேதனையில் சொல்றாங்க..

தேர்தல் நேரத்தில் கட்சி வேலையில் ஈடுபட்டால், இலைக்கட்சி தலைவர் அள்ளிஅள்ளி கொடுப்பாருன்னு ஆசைவார்த்தை கூறி பூத் கமிட்டியில் சேர்த்தாங்களாம்.. ஆனால் அதுபோன்ற பசையை நிர்வாகிகள் வெளியே எடுப்பதே இல்லையாம்.. இதனால் பூத் கமிட்டியில் இருப்போர் ரொம்பவே மனவேதனையில் இருக்காங்களாம்.. இந்நிலையில் ஒரு பகுதியில் 4 பூத்தில் உள்ள 36 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக பதவியை எடுத்துக்கோங்கன்னு கொடுத்த சம்பவமும் நடந்திருக்காம்..

அஸ்தம்பட்டி பகுதியில் மாஜி போலீஸ் அதிகாரி ஒருவர் செயலாளராக இருக்காராம்.. அவரது பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கு.. இவர்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்ததோடு, எல்லாத்தையும் சரி செய்துவிடலாமுன்னு சொல்லிட்டு, வட்ட செயலாளர் பதவியை பறித்ததோடு, கட்சிக்காரர்களை விட்டுட்டு உறவினர்களை வச்சி 36 இடத்தையும் புல்பண்ணிட்டாங்களாம்.. இந்த விவகாரத்துல மாங்கனியில் இருந்து வந்த நிர்வாகியின் வேலையும் அடங்கியிருக்காம்.. இதன்மூலம் கட்சிகாரர்களை விரட்டிட்டு இலைக்கட்சிக்கு எப்படி ஓட்டு வாங்குவீங்கன்னு இலைக்கட்சிக்காரங்க விம்முறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரர் பிரசார கூட்டத்திற்கு தலைக்கு இருநூறு தருவதாக பஸ்சில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள் படாதபாடு பட்டுட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரர் சமீபத்தில் பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்திற்கு குண்டு என முடியும் ஊரில் இருந்து கணிசமாக பெண்களை அழைத்து வந்தார்களாம்.. தலைக்கு 200 ரூபாய் தருவதாக கூறி நூற்றுக்கும் அதிகமானோரை முன்பதிவு செய்து பஸ்சில் அழைத்து வந்திருக்காங்க..

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதிக்கு பஸ் வந்ததும், ‘என்ன பணத்தை இதுவரை கொடுக்கவில்லை. பணத்தை கொடுங்கள்’ என கேட்டிருக்காங்க.. இதற்கு இலைக்கட்சியினரோ நாம கோட்டை என முடியும் ஊருக்கு போக வேண்டும். அங்கு தான் பணம் தருவார்கள் எனக் கூற அதையும் தாண்டி கோட்டை என முடியும் ஊருக்கு போனதும் மீண்டும் பணம் கேட்டிருக்காங்க.. ‘இங்க பணம் கொடுக்க மாட்டார்கள். மேடைக்கு முன்னால வந்தால்தான் பணம் தருவாங்க...’

எனக் கூற, அதிர்ச்சியடைந்த பெண்கள், பணம் கொடுத்தால் தான் பஸ்சை விட்டு இறங்குவோம் என அடம்பிடித்தாங்களாம்.. கடைசிவரை பணம் தராததால், அழைத்து வந்த பஸ்சில் இருந்து இறங்கிய பெண்கள், நேராக பேருந்து நிலையம் சென்று ஊருக்கு போய் சேர்ந்தார்களாம்.. எப்படி இருந்தாலும் அடுத்து எங்களிடம் தானே வரணும், பார்த்துக் கொள்கிறோம்னு ரொம்ப ஏமாற்றத்துடனே சென்றார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.