‘‘தந்தை, மகன் மோதலில் அன்பானவர் வெற்றிவாகை சூட, பாடுபட்டு உழைத்த தாஸ் ஆனவரோ கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..’’ என கேள்வியை தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி கட்சியில மாம்பழம் யாருக்கு என்ற போட்டி சில மாதங்களாகவே நிலவியது.. பீகாரை வைத்து கனியை பறித்த அன்பான மகன் ஆனவரோ, அடுத்த ஆகஸ்ட் வரைக்கும் அதை தக்க வைத்துக் கொண்டாராம்..
ஆனால் கனியை கொடுத்த கமிஷனிடம் கட்சியை பாடுபட்ட வளர்த்தெடுத்த தாஸ் ஆனவரோ அடுத்தடுத்து மனு போட்டு முறையிட தற்போது அன்பானவருக்கே கனி சொந்தம் என்ற ரிசல்ட்டை சொல்லி விட்டதாம்.. அன்பானவரோடு சேர்ந்து கமிஷனும் காலைவாரி விட்டதாக கொந்தளித்த மணியானவர், தாஸிடம் எல்லாம் பறிபோயிடுச்சு என டெல்லியில இருந்து தெரிவிக்கவே, நொந்துபோனாராம் தந்தையானவர்.
படிக்கவச்சு, மந்திரியாக்கி, கட்சியை கொடுத்ததற்கான பரிசுதான் இது என கொந்தளித்த தாஸ் ஆனவரோ, பசி பிணி தீர்க்கும் வள்ளலார் புகழ்மிக்க வடலூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில், வயிறு எரிந்து சொல்கிறேன்... உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது... என சாபமிட்டாராம்.. இதுபோன்ற நம்பிக்கை துரோகத்தை பார்த்ததில்லை என்ற அவரது முணுமுணுப்பு பற்றிதான் தமிழக வடமாவட்டங்களில் பரவலாக பேச்சு ஓடுகிறது..’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெட் சேண்டல் பதுக்கல மீண்டும் கண்கொத்தி பறவையான ஆந்திர காக்கிகள் கண்காணிக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதிக மவுசு உள்ள ரெட் சேண்டல், பக்கத்து மாநிலமான ஆந்திராவுல இருந்து பல நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருது.. இதனை தடுக்குறதுக்காக ஆந்திராவுல தனி டீம் இயங்கி வருது.. இதுல சில ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் அதிகளவுல வெயிலூர், கிரிவலம், மிஸ்டர் பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ரெட் சேண்டல் கடத்தலுக்கு சென்று பிடிபட்டு வந்தாங்க..
அங்கு நடந்த என்கவுன்டர் சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஆட்கள் செல்வதில்லையாம்.. ஆட்களை அங்கு அனுப்பி வைக்கும் ஏஜென்ட்களின் நடவடிக்கையும், செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமிகளின் நடவடிக்கைகளும் குறைந்திருந்துச்சு.. அதன்பிறகு அங்கு பிடிபடுபவர்கள் பெரும்பாலும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தாங்க.. இந்த நிலையில்தான் சிலமாதங்களாக ரெட் சேண்டல் கடத்தல் விவகாரத்துல வெயிலூர், கிரிவலம் மாவட்டங்களைச் சேர்ந்த சிலபேரு பிடிபட்டிருக்காங்க..
இதனால, இந்த ரெண்டு மாவட்டங்களையும், ஆந்திர காக்கிகள் திரும்பவும் கண்கொத்தி பறவையாக கண்காணிச்சு வர்றாங்களாம்.. அதோட இங்க ரெட் உட் குடோன் இருக்குதான்னு இன்பார்மர்களையும் களத்துல இறக்கி விட்டிருக்காங்களாம்.. சந்தேகம் உண்மையா இருந்தா, ரெட் உட் முக்கிய புள்ளிகள் சிக்குவாங்கன்னு காக்கிகள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியில் சேரும்படி ஆதரவாளர்கள் திடீர் நெருக்கடி கொடுப்பதால் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாஜி அமைச்சர் தள்ளப்பட்டுள்ளாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சரான வைத்தியானவர் தற்போது குழப்பத்தில் இருக்காரு.. வைத்தியானவரின் நெருங்கிய ஆதரவாளர்கள், புதிய கட்சி தொடங்க வேண்டாம். மீண்டும் இலை கட்சியில் சேருவதற்கான வேலையை பார்க்கும்படி நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்..
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அவர் ‘தவித்து’ வருகிறாராம்.. இனி ஒரு அளவுக்கு மேல் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வைத்தியானவர் சிக்கிக் தவிக்கிறாராம்.. முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஆதரவாளர்கள் முக்கிய முடிவை எடுத்து விடுவார்கள் என்ற அச்சமும் வைத்தியானவருக்கு எழுந்துள்ளதாக மாவட்டம் முழுவதும் அரசல்புரசலாக பேச்சு ஓடுது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கணக்கு போட்டு அடிப்பதில் இலைக்கட்சி தலைவரை யாரும் மிஞ்ச முடியாதுன்னு அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் அரசியலில் புரட்சி ஏற்பட்டு போனதாக கட்சிக்காரங்க மத்தியில பரபரப்பு ஏற்பட்டிருக்காம்.. பழுதாகி கிடக்கும் கட்சியை சீரமைக்க மொரப்பூரை சேர்ந்த பொறுப்பாளரை இலைக்கட்சி தலைவர் நியமிச்சாராம்.. அனைத்து பவரையும் அவரிடம் கொடுத்ததோடு என்ன செஞ்சாலும் பரவாயில்லை..
கட்சியை வெற்றி பெற வைத்தால் போதும், எந்த இடத்தில் கையெழுத்து போடசொன்னாலும் போடுவேன் என உறுதி கொடுத்தாராம்.. அந்த பொறுப்பாளர் மாங்கனி மாநகர் முழுவதையும் அலசி, பல பகுதிகள், வட்டங்களை உருவாக்கி புதிய புதிய நிர்வாகிளை போட்டாராம்.. அதோடு ரெண்டுமுறை எம்எல்ஏவாக இருந்ததோடு பத்தாண்டுகள் மா.செ.வாக இருந்தவரை பொறுப்பில் இருந்தே தூக்கிட்டாராம்.. இது தான் இலைக்கட்சி தலைவர் கை வைத்த முதல் மா.செ.வாம்..
அவருக்கு எல்லாமுமாக இருந்தவரை எப்படி தூக்கினார் என தொண்டர்கள் எல்லோருமே ஆச்சரியப்பட்டாங்களாம்... அதேபோல வேலை செய்யாத ரெண்டாங்கட்ட தலைவர்கள் எல்லோரும் ஓரங்கட்டப்பட்டார்களாம்... இதனால் அவர்கள் எல்லோரும் ஓரணியில் இருந்தாலும் ரகசியமாகவே இருப்பாங்களாம்.. இந்த நிலையில் தான் இலைக்கட்சி தலைவர் மனம் மாறியிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதுவும் பதவி பறிக்கப்பட்ட மா.செ.வுடன் அன்போடு பேசுறாராம்..
நிர்வாகிகளின் திருமண விழாவுக்கு போனால் அவரை அருகில் நிற்க வைக்கிறாராம்... உச்சகட்டமாக அவரை காரில் ஏத்திக்கிட்டு போறாராம்.. இதனை பார்த்து கட்சி நிர்வாகிகள் எல்லோரும் மூக்கின்மேல் விரலை வைக்கிறாங்களாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரை நன்கறிந்தவர்கள் வேறுவிதமாக சொல்றாங்க.. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் முப்பது சி செலவு செய்யணும்.. அதற்கான ஆள் யார் இருக்காங்கன்னு ஆராஞ்சி பார்த்ததில் அந்த மா.செ.தான் கண்ணில் பட்டாராம்..
இதற்கு நிழலானவரு ரொம்பவே சப்போர்ட்டா இருக்காராம்.. கணக்குப்போட்டு அடிப்பதில் இலைக்கட்சி தலைவரை விட்டால் யாரும் கிடையாதுன்னு சொல்றாங்க.. ஆனால் இலைக்கட்சி தலைவரை நம்பி புதிய நிர்வாகிகளை போட்ட பொறுப்பாளரும், அவரோடிருப்பவர்களும் ரொம்பவே தங்களது பதவி நீடிக்குமான்னு ஷாக்காயிருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


