சொந்த மண்ணில் டெஸ்ட்டில் ஒயிட்வாஷ்; கடினமான அட்டவணை தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்: முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி
கவுகாத்தி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் படுதோல்வியால் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியாவின் தோல்விக்கு மோசமான தயாரிப்பு, கடினமான அட்டவணை தான் காரணம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி: நியூசிலாந்து, தென்ஆப்ரிக்க அணிகள் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல அவர்களின் சிறந்த தயாரிப்புகள்தான் காரணம். நியூசிலாந்து இந்தியாவுக்கு வருவதற்கு முன் இலங்கையில் டெஸ்ட் தொடரை ஆடியது.
இதனால் அவர்கள் இங்குள்ள வானிலை, ஆடுகளங்களுக்கு பழகிவிட்டனர். தென்ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு வருதற்கு முன் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை ஆடியது. மேலும் அவர்களின் ஏ அணி இந்தியாவில் ஏ அணிக்கு எதிராக விளையாடியது. அதில் சில வீரர்கள் தயாராகி டெஸ்ட் போட்டிக்கு வந்தனர். அவர்களின் தயாரிப்பு மற்ற பல அணிகளை விட மிகவும் முழுமையானது. இந்தியா கிரிக்கெட்டின் ஒரு பெரிய சந்தையாக இருப்பதால் ஆண்டு முழுவதும் அதிக போட்டிகளில் ஆட வேண்டி உள்ளது. மற்ற நாடுகள் இந்தியாவுக்கு எதிராக ஆட விரும்புகின்றன. ஏனெனில் அது அவர்களின் தொலைக்காட்சி வருவாயை அதிகரிக்கும். கடந்த ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட்டில் ஆடியது. ஆனால் தற்போது தங்கள் சொந்த நாட்டில் தொடர் போட்டிகள் இருக்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு சென்றது தவறு.
சொந்த மண்ணில் விளையாடும் பருவத்தின் நடுவில் வெளிநாடுகளுக்கு செல்வதை நிறுத்த பிசிசிஐ உறுதியாக இருக்கவேண்டும். ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடர் போட்டிகள் இருக்கும்போது வெளிநாட்டு தொடர்களுக்கு செல்லாது. நீங்கள் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டுமெனில் இந்தியாவுக்கு வாருங்கள் என்று சொல்ல வேண்டும். அதைத்தான் இந்தியா செய்ய வேண்டும். 2 டெஸ்ட் தொடர்களுக்கு இடையில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர், டி20 தொடரை விளையாடுவது எந்த அர்த்தத்தையும் தரவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
2 முறை ஒயிட் வாஷ் அவமானம்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி செயல்படும் விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆல்ரவுண்டர்கள் மீதான இந்த மோகம் ஒரு முழுமையான மூளைச் சலவை ஆகும். அதிலும் குறிப்பாக, அவர்களுக்குப் பந்துவீச வாய்ப்பே கொடுக்காதபோது இது முட்டாள்தனமாக இருக்கிறது. படுமோசமான திட்டங்கள், படுமோசமான திறமைகள், படுமோசமான உடல் மொழி... சொந்த மண்ணில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு இரண்டு முறை ஒயிட்வாஷ் என்ற அவமானம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 9 மாதங்கள் இடைவெளி இருக்கிறது என்பதற்காக, இந்தத் தோல்வியை அப்படியே மறந்துவிடக் கூடாது. இந்த எதிர்மறையான அணுகுமுறை மாற வேண்டும். இவ்வாறு வெங்கடேஷ் பிராசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கவுதம் கம்பீருக்கு ஆதரவு
கடந்த 13 மாதங்களில் இந்தியா சொந்த மண்ணில் டெஸ்ட்டில் 2வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி இருக்கிறது. கடைசியாக ஆடிய 7 டெஸ்ட்டில் 5ல் தோல்வி அடைந்துள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பின்னர் 19 டெஸ்ட்டில் ஆடி 10ல் தோல்வி, 7ல் வெற்றி, 2 டிரா கண்டுள்ளது. இதனால் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்றபோது மக்கள் கம்பீரை பாராட்டாத நிலையில், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு அவரை கேள்வி கேட்பது நியாயமற்றது மற்றும் சீரற்றது. அவர் பயிற்சியாளராக ஒரு அணியை தயார் செய்வார். அவர் அனுபவமுள்ளவர் என்று உங்களுக்கு தெரியும், ஆனால் களத்தில் திறமையை வெளிப்படுத்தவேண்டியது வீரர்கள் தான். தற்போது தோல்விக்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்பவர்கள், சாம்பியன் டிராபியை வென்றபோது நீங்கள் என்ன செய்தீர்கள், என சாடி உள்ளார்.

