கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை பயின்ற ஐஐடி வனவானி பள்ளி விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்காக மறைந்த முதலமைச்சர் காமராஜரால் 1963ம் ஆண்டில் வனவானி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி திறந்துவைக்கப்பட்டது. 52 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, சார்ஜ்பி CEO க்ரிஷ் சுப்பிரமணியன்.
இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வனவானி பள்ளியில் பயின்றவர்கள் தான்.உலகின் தலைசிறந்த ஜாம்பவான்களை உருவாக்கிய இந்த வனவானி பள்ளி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளயது. தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இயங்கி வரும் இந்த பள்ளி இரு மொழி கல்வி திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தி மொழியை கற்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாய படுத்துவதாகவும் யுகேஜியில் ஆங்கிலத்திற்கு அடுத்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
பள்ளியை மூடுவதற்கான மறைமுக வேலைகள் நடந்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். நடப்பாண்டு எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஐடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பள்ளியை அரசே தனது கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.