சென்னை அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை மேம்படுத்தவும், உகந்த கற்றல் சூழலை ஏற்படுத்தவும் சன் டிவி 3 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் டிவி பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலை மேம்படுத்தவும் சன் டிவி 3 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரத்து 200 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஸ்மைல் பவுண்டேஷன் முதுநிலை இயக்குநர் சுப்ரோட்டோ ராயிடம் சன் டிவி சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது, ஸ்மைல் பவுண்டேஷன் நிறுவன மண்டல தலைவர் அர்ச்சனா சதீஷ் உடனிருந்தார். சன் டிவி அளித்த நிதி உதவியின் மூலம், கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் ஆய்வகங்கள், STEM ஆய்வகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்பட உள்ளதாக ஸ்மைல் பவுண்டேஷன் முதுநிலை இயக்குநர் சுப்ரோட்டோ ராய் தெரிவித்தார்.
ஸ்மைல் பவுண்டேஷன் அமைப்புக்கு சன் டிவி இதுவரை அளித்த நிதி உதவி மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 35 அரசுப் பள்ளிகளில் 5 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தொழில்நுட்ப ரீதியாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க, 1 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் 4 நடமாடும் மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
சமூகத்தில் பின்தங்கிய பகுதிகளில் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை செய்வதற்காக ஸ்மைல் பவுண்டேஷன் அமைப்புக்கு கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி உதவியை சன் டிவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.