சூலூர்: சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், சூலூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு போர் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் அதனுடன் விமானம் பழுது நீக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நிலைகளில் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு விமானப்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவலறிந்து சூலூர் போலீசார் விமானப் படைத்தளத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சானு (47) என்றும், கிராப்பல் நிலை வீரராக பதவி வகித்த இவருக்கு இந்துலேகா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகன், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்று தெரிய வந்தது.
இந்நிலையில் சானுவின் மனைவி இந்துலேகா(42) சூலூர் போலீசில் அளித்துள்ள மனுவில், ‘இரு வாரங்களுக்கு முன் கணவர் ஊருக்கு வந்த போது, கொஞ்சம் மன அழுத்தத்துடன் இருப்பதாக கூறினார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கவுன்சலிங் பெற்றார்.அப்போது மருத்துவர் ஒரு வாரம் சாப்பிட சொல்லி மாத்திரை அளித்தார். ஆனால் அவர் 2 நாள் மட்டுமே சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை சாப்பிட மறுத்து விட்டார். கடந்த 12ம் தேதி மீண்டும் வேலைக்கு சென்றார்.
இன்று (நேற்று) காலை கணவருடன் பணியாற்றும் ஸ்ரீவல்சன் என்பவர் எனக்கு போன் செய்து காலை 6.10 மணிக்கு வாட்ச் டவரில் ஏறி சானு கழுத்தில் ஏ.கே.103 துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். கணவர் மன அழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.