பழநி: பழநியில் படிப்பாதை வழி செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நேற்று கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் வருகை இருந்த நிலையில், தற்போது தமிழக ஐயப்ப பக்தர்களின் வருகையும் துவங்கி உள்ளது. இதனால் பழநி நகரம் களைகட்ட துவங்கி உள்ளது. மேலும், பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் களைப்பை குறைக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஐயப்ப சீசன் துவங்கி உள்ளதால், தினமும் அதிகாலை 4.30 மணி முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனர். தற்போது அதிகாலை வேளையில் பனி தாக்கத்தால் கடுங்குளிரும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்கப்படுகிறது. யானைப்பாதையில் இடும்பர் சன்னதி அருகில் பக்தர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


