விவசாயிகள் பல தலைமுறையாக சாகுபடி செய்துவரும் பயிர்களில் நெல்லும், கரும்பும் முதன்மையானவை. இதில் சர்க்கரை ஆலை எடுத்துக்கொள்ளும், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையும் உரிய நேரத்தில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டவர்கள், அதைத் தொடர்ச்சியாக செய்து வருவார்கள். கரும்பை சாகுபடி செய்வதற்கு இந்த காரணத்தோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது கட்டைக்கரும்பு வருவாய்தான். வாழை மரங்களில் பக்கக்கன்றுகள் முளைத்து அடுத்தடுத்த மகசூல் தருவதுபோல கரும்பிலும், அருகில் புதிதாக கரணைகள் முளைத்து பலன் தரும். கட்டைக்கரும்பு, மறுதாம்பு கரும்பு என்ற பெயர்களில் அழைக்கப் படும் இந்த விசேஷ சாகுபடியில் சில பராமரிப்புகளைச் செய்தால் கூடுதல் பலனைப் பெறலாம். இந்தக் கட்டைக் கரும்பானது முதல் கரும்புப் பயிர் வளர்ச்சிக்கு முன்னரே முதிர்ச்சி அடைந்துவிடும். முறையான ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் மற்றும் போதுமான பயிர் எண்ணிக்கைத் தொகையை பாதுகாத்தல் ஆகிய செயல்களின் மூலம் கட்டைக்கரும்பின் மகசூலை நிச்சயம் அதிகரிக்கலாம்.
தோதான ரகங்கள்
நல்ல ஊட்டமான கட்டைக் கரும்புகள் உருவாக சிறந்த கரும்பு ரகங்களைத் தேர்வு செய்வது அவசியம். கோ 8013, கோ 6907, கோ 8014, 85ஏ261, 87ஏ298, 90ஏ272, 92ஏ123, 81வி48, 91வி83, 93வி297, 97வி60, 83ஆர்23 ஆகிய ரகங்கள் முன் பருவ சாகுபடிக்கும், 83வி18, 89வி74, 93ஏ145, 94ஏ109, கோ7219, கோ 7805 கோ 7706, மற்றும் கோ 86032 ஆகிய ரகங்கள் மத்திய பின் பருவப் பயிர் சாகுபடிக்கும் தோதானவை.
பயிர் சாகுபடி முறைகள்
கட்டைக் கரும்பை முறையாக வளர்த்தெடுக்க, நாம் முதன்மையாக செய்யும் கரும்பு சாகுபடியில் சில பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கீழ்க்காணும் வழிகாட்டல்களைப் பின்பற்றலாம்.
* முதல் கரும்பு அறுவடையின்போது, நிலமட்டத்திற்கு கொத்துக்களை வெட்டுவதற்கு கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
* வயலில் இருக்கும் இறந்த கரும்புத் துண்டுகள் மற்றும் சருகுகளை நீக்கி வயலைச் சுத்தம் செய்ய வேண்டும்.
*கலப்பையைக் கொண்டு சால்களுக்கிடையே மண்கட்டிகளை உடைக்க வேண்டும்.
* கூர்மையான கத்தியைக் கொண்டு நிலமட்டம் வரை தாள் சீவுதல் வேண்டும். தாள் சீவுதல் மூலம் முதிர்ந்த மொட்டுக்களை அகற்றி புதிய மொட்டுகள் புத்துயிர்ப்பாக வர வழிவகை செய்யலாம். தாள் சீவுதலின்போது பயிர்க்
குத்துக்களுக்கு தீமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இடைவெளி நிரப்புதல்
முதல் கரும்புப் பயிர் அறுவடையின்போது, அறுவடை செய்பவர்களின் இடப்பெயர்ச்சியால், கட்டைப் பயிரில் அதிக இடைவெளி / சந்துகள் ஏற்படும். எனவே, கட்டைப் பயிரிலும் அதிக கரும்பு உருவாவதற்கு இந்த இடைவெளி /சந்துகளை நிரப்புவது மிக அவசியம். இடைவெளி நிரப்புதலை பின்வரும் வழிகளின் மூலம் மேற்கொள்ளலாம்.
* கரணையைக் கொண்டு ஒன்று/ இரண்டு/ மூன்று அரும்புகளுடைய கரணைகளை இடைவெளியில் வைக்கலாம்.
*“பாலிதீன் பை முறை” மூலம் கரணைகளை முன்னரே முளைக்க வைக்கலாம்.
*அடர்த்தியான எண்ணிக்கை யுடைய இடத்திலிருந்து அகற்றி, இடைவெளி இருக்கும் இடத்தை நிரப்பலாம்.
* கட்டைக் கரும்பு மேலாண்மையை சிறப்புறச் செய்ய கரும்பு நடவிலும் நாம் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட முறைகள் சிறந்தவை.
* ஒரு அரும்புடைய கரணைகளை பாதுகாப்பாக வெட்ட வேண்டும்.
* பாலிதீன் பையில் நடும்போது மொட்டு / அரும்பு மேல்நோக்கிய திசையில் இருக்குமாறு கவனமாய் நடவேண்டும்.
*கரணையின் அரும்பின் மேல் மெல்லிய மண் படலம் இருக்க வேண்டும்.
* பாலிதீன் பைகளை வரிசைகளாக வைக்க வேண்டும்.
* பூவாளியைப் பயன்படுத்தி நீர் தெளிப்பதற்காக, ஒவ்வொரு ஆறு வரிசைகளுக்கிடையே நடக்க பாதை விட வேண்டும்.
* சுற்றுப்புற நிலைமையின் அடிப்படையைக் கொண்டு நீர் தெளிக்கும் எண்ணிக்கை வேறுபடும்.
* பாலிதீன் பைகளை நிழலுக்குக் கீழ் வைக்க வேண்டும்.
* 10-12வது நாட்களுக்குப் பிறகு மொட்டுக்கள் /அரும்புகள் முளைப்பு விடத் தொடங்கிவிடும். பொதுவாக 35-40 நாட்களான கரணைகளையே நடவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* நடவின்போது, பாலிதீன் பையில் உள்ள மண்ணுக்கு சேதம் ஏற்படாதவாறு கவனம் செலுத்த வேண்டும்.
* கத்தியைப் பயன்படுத்தி பாலிதீன் பையின் ஒரு பக்கத்தில் நீளவாக்கில் மெல்லிய வெட்டு கொடுத்து கவனமாக பையினை அகற்றி, பயிரிடும் நிலத்தில் அமைந்துள்ள சாலில் கரணைகளை வைக்க வேண்டும்.
நிலப்போர்வை
கரும்பு வயலில் உதிர்ந்து விழும் சருகுகள் (காய்ந்த தோகைகள்) பயிருக்கு நல்ல உரம். எனவே வயலின் சால்களுக்கிடையே ஒரு எக்டருக்கு 3 டன்கள் சருகு என்ற அளவில் இட்டு பரப்பி விட வேண்டும். இவற்றின் மூலம் பல நன்மைகள்உருவாகும்.
*மண்ணுக்கு உறையாக விளங்குகிறது.
*மண் ஈரம் ஆவியாகுதலைத் தடுக்கிறது.
* மண் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.
* வேர் மண்டலத்தை ஈரமாக வைக்க உதவுகிறது.
* அதிக தூர்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
* இளங்குருத்துப்புழு ஏற்படாமல் தடுக்கிறது.
* நிற்கும் பயிரை பச்சை வண்ணத்தில் வைக்கிறது.
* பயிர் அதிக ஊட்டச்சத்தினை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது.
(கட்டைக்கரும்பு தொடர்பான தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்)
