Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார்

ஐதராபாத்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக் குறைவால் காலமானார். ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுதாகர் ரெட்டியின் உயிர் பிரிந்தது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வானவர் சுதாகர் ரெட்டி; 2012-19 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சுதாகர் ரெட்டி இருந்துள்ளார். சுதாகர் ரெட்டி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மதிப்புமிக்க தலைவர் சுராவரம் சுதாகர் ரெட்டி (83) நேற்று (22.08.2025) இரவு 9 மணியளவில் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.

எஸ். சுதாகர் ரெட்டி, தற்போதை தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில், விடுதலைப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1942 மார்ச் 25 ஆம் தேதி பிறந்தவர். கர்னூல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், கிருஸ்துவ மேல் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பெற்றவர். தொடர்ந்து ஐதராபாத் நகரில் உள்ள உஸ்மானிய பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வியும், சட்டப்படிப்பும் முடித்தவர். கர்னூலில் பள்ளிக் கல்வி பெற்று வந்த காலத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பள்ளியின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளுக்காக போராட்டத்தை தொடங்கியவர். 1965-66 புதுச்சேரியில் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 17-வது தேசிய மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர். இறுதி மூச்சு வரை பொதுவாழ்வில் நெறிசார்ந்து வாழ்ந்து காட்டிய தியாகச் செம்மலாக உயர்ந்து நிற்பவர்.

ஒன்றுபட்ட ஆந்திர மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் என படிப்படியாக பல பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தோழமை உறவை வலுப்படுத்தி வந்தவர். உலக கம்யூனிஸ்டு இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செலுத்தியவர். கட்சி எல்லைகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வுப் பிரமுகர்கள், துறை சார்ந்த நிபுணர்களின் நன்மதிப்பை பெற்றவர். இவரது வாழ்விணையர் பி.வி.விஜயலட்சுமியும் தொழிற்சங்க அரங்கின் முன்னணி தலைவராக திகழ்ந்து வருபவர்.

நல்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இருமுறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலன் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராக இருந்து, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி வந்த சுதாகர் ரெட்டி, தனது உடல்நிலை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொல்லம் கட்சி மாநாட்டில் தாமாக முன் வந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஐதராபாத் நகரில் தங்கியிருந்த நிலையில் சமூக ஊடகங்கள் வழியாக கட்சியின் கொள்கை நிலைகளையும், மார்க்சிய- லெனினிய தத்துவத்தையும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தவர்.

இவரது பொது வாழ்வு காலத்தில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். சுதாகர் ரெட்டி - பி வி விஜயலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுதாகர் ரெட்டி மறைவு ஒட்டு மொத்த கம்யூனிஸ்டு இயக்கத்துக்கும், மதச்சார்பற்ற ஜனநாயக பாதுகாப்புப் போராட்டத்துக்கும் பேரிழிப்பாகும். எந்த வகையிலும் எளிதில் ஈடு செய்ய இயலாதது. தன்னை மறுப்பின் அடையாளமாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் கடைசி வரை பணியாற்றிய தோழர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவுக்கு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்த நிற்கும் அவரது வாழ்வினையர் பி வி விஜயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ஆந்திரா, தெலுங்கானா மாநில கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எஸ் சுதாகர் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முறையில் தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் கட்சிக் கொடிகள் தாழ்த்தி மரியாதை செலுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.