சரணடைய அவகாசம் கேட்ட நிலையில் ‘கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவோம்’: நக்சல்களின் திடீர் முழக்கத்தால் பரபரப்பு
புதுடெல்லி: கடந்த ஓராண்டில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் நக்சல்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நக்சல் முக்கிய தளபதி மத்வி ஹித்மா கொல்லப்பட்டது அந்த இயக்கத்திற்குப் பேரிழப்பாக அமைந்தது. இதுவரை உயர்மட்டத் தலைவர்கள் உட்பட 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில அரசின் மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து வருகின்றனர். இதனால் நிலைகுலைந்து போயுள்ள அந்த இயக்கம், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறது. இந்தச் சூழலில், மகாராஷ்டிரா - மத்தியப் பிரதேசம் - சட்டீஸ்கர் மண்டலக் குழுவினர் தங்கள் உறுப்பினர்கள் சரணடைவதற்காக வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை தாக்குதல்களை நிறுத்துமாறு மூன்று மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால், இதற்கு நேர்மாறாக நக்சல்களின் மத்திய படைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவோம்; சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த டிசம்பர் 2 முதல் 8 வரை மக்கள் விடுதலை கொரில்லாப்படை வாரம் அனுசரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஆயுதம் ஏந்திய நக்சல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, ‘எக்காரணத்தைக் கொண்டும் தேடுதல் வேட்டை நிறுத்தப்படாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கப் போவதாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதியளித்துள்ள நிலையில், நக்சல்களின் இந்த முரண்பட்ட அறிவிப்புகள் பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


