மக்களுக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல்; மணலியில் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதா..? வாயை மூடி, கண்ணை பொத்தி சென்றனர்
திருவொற்றியூர்: சென்னை மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எஃப்எல் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து உரம் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்றிரவு தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த மக்களுக்கு திடீரென கடும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் பரவியதும் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகிய பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் முகத்தில் கர்சீப்பை கட்டிக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் தொழிற்சாலையை கடந்து சென்றனர். டி.பி.பி சாலை, மணலி சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கும் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்களும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி போலீசாரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் வந்து விசாரித்தனர். உரத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா மூலப் பொருள் புகை போக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால் அந்த வாயு காற்றில் பரவி தொழிற்சாலை அருகே சென்ற மக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
‘’மழைக் காலங்களில் அமோனியா வாயு காற்றில் பரவும் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
