சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆந்திர மாநிலக்கட்சிகள் ஆதரிக்குமா? அதிமுக, பாஜவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழர் என்பதற்காக ஆதரிக்க வேண்டுமென அதிமுக, பாஜ. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதே கோரிக்கை ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா?
இத்தகைய வாதம் எந்த வகையிலும் பொருளற்றதாகும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகிறாரோ, எந்த கொள்கைகளை முன்னிலைப்படுத்துகிறாரோ, அதை வைத்து தான் ஒரு வேட்பாளரை முடிவு செய்ய முடியும்.
அந்த வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழக நலன்களுக்கு விரோதமாக தமிழர் உரிமைகளை பறிக்கிற, நீட் தேர்வை திணிக்கிற, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை புகுத்துகிற, நிதி பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கிற தமிழர்கள் விரோத கட்சியான பா.ஜ.வின் வேட்பாளர் என்பதை எவரும் மறந்திட இயலாது.
எனவே, இந்தியாவின் நலன்களுக்காக அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து பாதுகாப்பதற்கான முழு தகுதியுடைய நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது, இந்தியாவிற்கு நல்லது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.