நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் ஐஎன்எஸ் மாஹே கடற்படையில் சேர்ப்பு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை போர்க்கப்பல்
புதுடெல்லி: நீர் மூழ்கி கப்பல்கலை வேட்டையாடும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இது புதிய தலைமுறை போர்க்கப்பலாகும். இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே, கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த போர்க்கப்பலை முறைப்படி இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில், ராணுவ தளபதி உபேந்திர திவேதி பங்கேற்று ஐஎன்எஸ் மாஹேயை கடற்படையில் இணைந்தார்.
இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடி வேட்டையாடுவது, கடலோரப் பகுதிகளில் ரோந்து செல்வது மற்றும் முக்கியமான கடல்சார் வழித்தடங்களைப் பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மாஹே கப்பலில் 80 சதவீத பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இது இந்தியாவின் கடல்சார் திறனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் ராணுவ தளபதி திவேதி கூறினார்.
மாஹே வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் போர்க்கப்பல் இது. இது போல மேலும் 7 மாஹே ரக போர்க்கப்பல்களை கொச்சி கப்பல் கட்டும் தளம் தயாரித்து 2027ல் வழங்க உள்ளது.
* ஐஎன்எஸ் மாஹே 78 மீட்டர் நீளமும் 1,100 டன் எடையும் கொண்டது.
* மணிக்கு 25 நாட்டிகல் மைல் வேகத்தில் தொடர்ச்சியாக 1800 நாட்டிகல் தூரத்திற்கு பயணிக்கக் கூடியது.
* இக்கப்பல் நீர்மூழ்கி குண்டுகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது.
* மாஹே என்பது மலபார் கடற்கரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ’மாஹே’ நகரின் பெயரை குறிக்கிறது.
* இந்த கப்பலின் இலச்சினையில் ‘களரி’ தற்காப்பு கலையில் பயன்படுத்தப்படும் உருமி வாள் இடம் பெற்றுள்ளது. இது கப்பலின் வேகத்தையும் துல்லியத்தையும் அபாரமான வலிமையையும் குறிப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



