6 ஆண்டு ஒன்றாக இருந்துவிட்டு ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ ஏமாற்றிவிட்டார் போதையில் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு ‘யூ-டியூபர்’ இலக்கியா தற்கொலை முயற்சி
* பின்னணி குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
சென்னை: 6 வருடம் தன்னுடன் இருந்து ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ ஏமாற்றிவிட்டதாக கூறி மதுபோதையில் அதிகளவில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு பிரபல டிக்டாக் புகழ் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் மூலம் இளைஞர் முதல் வயதானவர்கள் என லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் இலக்கியா.
இவர் தனது ஆபாச நடனம் மூலம் பிரபலமானார். டிக்டாக் செயலியை ஒன்றிய அரசு தடை செய்த பிறகு, தற்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இலக்கியா தனது வீடியோக்களை போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இலக்கியாவை 16 லட்சம் பாலோவர்கள் இன்றும் பின் தொடர்ந்து வருகின்றனர். இலக்கியாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்ததால் அவர் ‘ஜாம்பி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை.
இருந்தாலும் அவர் தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தின் மூலம் மசாலா திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் அதிகளவில் வந்ததால், இலக்கியா தற்போது பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இலக்கியா நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்தார். அதில் ‘‘என்னுடைய சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம்.
என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். 6 வருசமா அவன்கூட இருந்ததற்கு நிறைய பொண்ணுங்க கூட பழக்கம்...... அதை கேட்டதற்கு என்னை போட்டு அடிக்கிறான்..... நானும் பொறுத்து பொறுத்து என்னால முடியில.... இதுக்குமேல நான் ஸ்டேட்டஸ் போட்டா என்ன அடி அடின்னு அடிப்பான்... எனக்கு ஏதாவது ஆச்சின்னா, அதுக்கு இவன் மட்டும் தான் பொறுப்பு... இதுக்கப்புறம் வாழ்வதற்கு ஒன்னுமே இல்ல, நான் செத்தால் எல்லாரும் நல்லா தான் இருப்பாங்க.....’’ என்று பதிவு செய்து, 15 மாத்திரைகள் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
இதை பார்த்த அவரது தீவிர ரசிகர்களில் சிலர் மற்றும் உறவினர்கள் இலக்கியாவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உடனே அவரது வீட்டிற்கு வந்து பார்த்த போது, அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் இலக்கியாவை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது இலக்கியா உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
மேலும் அவர் அதிகளவில் மது அருந்தி இருந்ததால் உடனே மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்ற, அரசு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது உடன் வந்த அவரது நண்பர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இலக்கியாவை அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
பின்னர் மருத்துவமனை தகவலின்படி மாங்காடு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, டிக்டாக் பிரபலம் இலக்கியா தனது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரை திருமணம் செய்து கொள்வதாக கூறி 6 ஆண்டுகள் பழகி வந்துள்ளார். ஆனால் இலக்கியா சினிமா படப்பிடிப்பு காரணமாக அடிக்கடி துபாய், மலேசியா, சிங்கப்பூர் சென்ற நேரத்தில் அவரது ஆண் நண்பர் பல பெண்களுடன் பழக்கி வந்ததாக கூறப்படுகிறது. இது இலக்கியா கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து அவரது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் இலக்கியா தற்கொலை முடிவுக்கு சென்றது விசாரணையின் மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் தற்கொலை முயற்சி என்பதால் போலீசார் இலக்கியா மற்றும் அவரது ஆண் நண்பரான ஸ்டண்ட் மாஸ்டரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே இலக்கியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘அனைத்தும் பொய் செய்தி’ என பதிவு செய்துள்ளார். டிக்டாக் பிரபலம் இலக்கியா அதிகளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* எனக்கு சம்பந்தம் இல்லை: ஸ்டண்ட் மாஸ்டர்
டிக்டாக் பிரபலம் இலக்கியா, தற்கொலை முயற்சிக்கு முன்பு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், எனக்கு ஏதாவது ஆச்சின்னா, அதுக்கு இவன் மட்டும் தான் பொறுப்பு என்று இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
இதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அளித்த விளக்கத்தில், ‘இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியில் இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன், நான் வேட்டுவம் விபத்து பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.