கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி அலம் பகுதியில் கடந்த 13ம்தேதி வேட்டுவம் திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது சண்டைக் காட்சியில் காரை ஓட்டி வந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (52) விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார், இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கீர்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக டைரக்டர் பா.ரஞ்சித் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நீதிமன்றம் புறக்கணிப்பு காரணமாக அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, பா.ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.