ஸ்ரீவில்லி/வத்றாப் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சதுரகிரி கோயிலில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தயாராகி வரும் தேரையும் தேர் வரும் பாதைகளான ரத வீதிகளையும் கலெக்டர் சுக புத்திரா, எஸ்பி கண்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, சிவகாசி சப் கலெக்டர் பாலாஜி, இந்து அறநிலையத்துறை ஏசி நாகராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, தாசில்தார் பாலமுருகன், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், அரசு தலைமை மருத்துவர் காளிராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. ஆடி அமாவாசை 24ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று தாணிப்பறை அடிவாரப் பகுதி மற்றும் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட், மருத்துவ வசதி, பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட எஸ்.பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் தேவராஜ், வத்திராயிருப்பு தாசில்தார் ஆண்டாள், திட்ட இயக்குனர் கேசவதாசன், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், சதுரகிரி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சந்திரகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.