விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு பள்ளியில் அக்கா, தங்கைக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்: தேம்பி தேம்பி அழுத தம்பியால் சோகம்
கருர்: விஜய் பிரசாரத்தில் அக்கா, தங்கை உயிரிழந்தனர். அவர்கள் படித்த பள்ளியில் சக மாணவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்களது தம்பி தேம்பி, தேம்பி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள், செல்வராணி தம்பதியின் மகள்கள் பழனியம்மாள் (11), கோகிலா (6) ஆகியோரும் பலியாகினர். ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பழனியம்மாள் 6ம் வகுப்பும், கோகிலா 3ம்வகுப்பும் படித்து வந்தனர். இதே பள்ளியில் இவர்களின் தம்பி லோகேஸ்வரன் (5) 1ம் வகுப்பு படித்து வருகிறான்.
காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் பயின்ற சகோதரிகள் இருவரும் நெரிசலில் சிக்கி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறுமிகள் இருவரின் உருவப்படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஷகிலா தலைமையில் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர். தனது 2 அக்காவின் படத்திற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துவதை பார்த்து ேலாகேஸ்வரன் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் பெற்றோர் அவனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.