Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக தமிழக கல்லூரி மாணவர்கள் 25 பேர் விமானம் மூலம் லண்டன் சென்றனர்

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்பொழுது லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்களை தேர்வு செய்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கல்லூரிகள் மூலம் பெற்றது. இதற்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகள் நடத்தி, அதில் 100 பேரை தேர்வு செய்தனர். அதன்பின்பு அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அந்த சிறப்பு பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ மாணவிகள், லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் இரு பேராசிரியர்களும் உடன் சென்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5.39 மணியளவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம், லண்டன் புறப்பட்டுச் சென்ற மாணவ மாணவிகளை, அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த மாணவர்கள், பெற்றோர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். லண்டன் செல்லும் மாணவ மாணவிகளுக்கு வரும் 16ம் தேதி வரையில் சிறப்பு பயிற்சிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ‘சிறகுகள் விரியட்டும்! மகிழ்ச்சி’’

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 25 மாணவர்கள் இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாநகருக்கு செல்வதைப் பாராட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் “சிறகுகள் விரியட்டும்! மகிழ்ச்சி!” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம்...

இந்தப் பயணம் குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து நிறைய பயிற்சிகள் பெற்றேன். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும், வகுப்புகள் எடுக்கப்பட்டன. 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு, முதல் 25 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். லண்டனிலுள்ள கல்லூரியில், சிறப்பு பயிற்சிக்காக செல்லவுள்ளோம். இது எங்கள் வாழ்விற்கு மிகுந்த பயன் அளிக்கும் எனக் கூறினார்.

இதேபோல் மாணவர் யோகேஷ்வரன் கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தினால் பயனடைந்த மாணவன் நான். இன்றைய சூழலில் என்ன தேவையோ அதனை எங்களுக்கு பயிற்சியாகக் கொடுத்தார்கள். தற்பொழுது லண்டனில் சிறப்பு பயிற்சிக்காக செல்கிறோம். இதற்காக பல்வேறு கட்ட தேர்வு செய்தனர். அதில் அனைத்திலும் தேர்ச்சி அடைந்து, லண்டன் செல்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறினார்.