ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசு பள்ளிகளில் உள்ள பாழடைந்த 86,000 வகுப்பறைகளை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் தங்கிபுரா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பிப்லோட் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கூரையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 7 மாணவர்கள் பலியாகினர். 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் இயங்கும் பாழடைந்த பள்ளி கட்டிடங்கள் பற்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,’ ராஜஸ்தானில் 63,018 அரசு பள்ளிகளில் 5,26,162 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 86,934 வகுப்பறைகள் முழுவதும் பாழடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் 86,000க்கும் மேற்பட்ட பாழடைந்த அறைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. அந்த அறைகளை பூட்டி வைக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.