புதுகை அருகே வீடியோ வைரல்; பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: தொடக்கக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை
புதுக்கோட்டை: புதுகை அருகே அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் தொடக்கக் கல்வி துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் உள்ள 7 கழிவறையை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்கு மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதில் மாணவர்கள் தண்ணீரை பிடித்து ஊற்றுவதும், துடைப்பத்தால் துடைப்பது போன்ற காட்சி வீடியோ வைரலான நிலையில் பரபரப்பானது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம் உரிய விசாரணை நடத்த தொடக்கக்கல்வி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அறந்தாங்கி தொடக்கக்கல்வி மாவட்ட அதிகாரி கலாராணி விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று தொடக்கக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அதன்பின்னர் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்ய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.