Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெறுவதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலைக்கழகத்துடன் நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலைக்கழகத்துடன் நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்துடன் இணைந்து மாநில அளவிலான பல்வேறு திறன் பயிற்சிகள் அளிப்பதற்கான ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை;

சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்ற மாநாட்டில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி, நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். நிறைய அரசியல் மாநாடுகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால், முதல்முறையாக ஒரு பொறியாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்ற வாய்ப்பை கொடுத்த சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தினருக்கு முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேற்றைக்கு தொடங்கி இன்றுடன் இரண்டு நாட்களாக இந்த மாநாடு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று Technical Sessions, Exhibitions என்று ஏராளமான சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் உங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நிறைய நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனுடன் தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு, இந்த நிகழ்ச்சி நடக்கிறது. குறிப்பாக, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இங்கு கையெழுத்தாகி இருக்கிறது.

பொதுவாகவே, பொறியாளர்கள் என்று சொன்னால் எதையுமே நேர்த்தியாக செய்யக் கூடிய, மிகவும் Perfectionist என்று சொல்லுவார்கள். இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனைபேரும் Perfectionist. அதிலும் தமிழ் பொறியாளர்களை பத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிட்டத்தட்ட 1,000 வருசத்துக்கு முன்னாடியே மிகப்பெரிய கட்டுமானங்கள், அணைகளைக் கட்டிய பெருமை நம்முடைய தமிழர்களுக்கு உண்டு.

இன்றைக்கு உலகத்தில் எந்த நாட்டுக்குப் போனாலும், நாம் அங்கு சந்திக்ககூடியவர்கள் தமிழ் பொறியாளர்கள் தான். அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ் பொறியாளர்கள் தான். இந்த சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள். 20-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து வந்திருக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டவுடன் ரொம்ப சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சமீபத்தில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு வந்தபோது உங்களில் நிறைபேர் சந்தித்ததாக நான் கேள்விப்பட்டேன். அன்போடு, பாசத்தோடு முதலமைச்சர் அவர்களை வரவேற்று நீங்கள் புகைப்படம் எல்லாம் எடுத்து கொண்டீர்கள். உங்களுடைய அன்போடும், ஆதரவோடும், சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஈர்த்து கொண்டு வந்து இருக்கின்றார்கள். முதலீடுகள் மட்டுமல்ல, 18 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் பெற்று கொடுத்திருக்கிறார். இது சாத்தியமானதுக்கு அரசு முயற்சிகள், முதலமைச்சர் அவர்களுடைய முயற்சிகள் இருந்தாலும், உங்களை மாதிரி வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழ் உறவுகளுடைய ஆதரவும், அன்பும் மிக, மிக முக்கியமான காரணம்.

நாம் வெளிநாடுகளில் அடிக்கடி சந்தித்து கொண்டு இருந்த போதும், இன்றைக்கு தமிழ்நாட்டில், நம்முடைய தாய்நாட்டில் சந்திக்கின்ற வாய்ப்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக கிடைத்திருக்கிறது. பொதுவாக மற்ற துறைகளில் வேலை செய்பவர்கள் எல்லாம், அவரவர் துறைகளில் ஸ்பெசலிஷ்டாக இருப்பார்கள். அதில் வேலை செய்வார்கள். ஆனால் பொறியாளர்கள் மட்டும் தான், எல்லாத் துறைகளிலும் ஸ்பெசலிஷ்டாக இருப்பார்கள். அந்த அளவுக்கு Multi- Talented Persons என்றால் இங்கு வந்திருக்கக்கூடிய பொறியாளர்கள் நீங்கள் தான்.

இன்றைக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் இருக்கின்றீர்கள். அதற்கான விதை முதலில் போட்டது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை அதிகளவில் திறந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். கல்லூரிகளைத் தொடங்கியதோடு மட்டும் நிற்கவில்லை. பொறியியல் படிக்க நுழைவுத்தேர்வு தேவை இல்லை என்று ரத்து செய்ததும் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.

நுழைவுத்தேர்வு ரத்து மட்டுமல்ல. ஏழை, எளிய மாணவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் என்று, முதல் தலைமுறையாக படிக்க வருகின்றவர்களுக்கு அவர்களுடைய கட்டணத்தை அரசே ஏற்கும் வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியவரும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். இன்றைக்கு அவரால் தான், ஒவ்வொரு வருஷமும், இந்தியாவுலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகள் வெளியில் வருகின்ற மாநிலமாக இன்றைக்கு தமிழ்நாடு உருவெடுத்துள்து.

பொறியியல் கல்லூரிகளை மட்டுமல்ல, கலைஞர் அவர்கள் உருவாக்கிய Tidel Park, IT Corridors, Automobile Hub மூலமாக இன்றைக்கு தமிழ்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து கொண்டிருக்கிறது. உங்களில் பலபேர், மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் பணியை தொடங்கி On Site மூலமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்கள்.

உங்களுடைய Success Stories பலவற்றை திராவிடத்தால் வாழ்ந்தோம் என்ற பதிவுகளின் வீடியோக்களை நானும் பலமுறை பார்த்திருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருத்தரின் வெற்றி மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு Inspiration-ஆக அமைந்துள்ளது. உங்களை மாதிரி, இன்னும் பல ஆயிரம் பேரை உருவாக்க வேண்டும் என்று 3 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை இன்றைக்கு கொடுக்க இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, 6 ஆயிரம் பேருக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நம்முடைய அரசு சார்பாக இங்கே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக இருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

எல்லாத்துக்கு மேல, அரசுப்பள்ளியில் படித்துவிட்டு, உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்ற மாணவர்களுடைய முழு கல்வி செலவையும், கட்டணச்செலவையும் அரசே ஏற்கும் என்கின்ற முக்கியமான திட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, நான் முதல்வன் SCOUT திட்டம் மூலமாக, ஆண்டுக்கு 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டுக்கு சென்று Internship Training-ம், வேலைவாய்ப்பையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்த மாதிரியான மாணவர்கள் சாதிக்க நீங்கள் அத்தனைபேரும் வழிகாட்ட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் உங்களுடைய நலனுக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததுமே, அயலகத் தமிழர் நலனுக்காக ஒரு தனி அமைச்சகமே உருவாக்கினார். முக்கியமாக 2 அல்லது 3 தலைமுறையாக வெளிநாடுகளில் இருக்கக்கூடிய அயலகத்தமிழ் வம்சாவளியினர் தமிழ்நாட்டினுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, வேர்களைத் தேடி என்ற திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்ப்பொறியாளர்கள் நீங்கள் உங்களுடைய Ideas-யும், Supports-யும் நம்முடைய அரசுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். நீங்கள் பணி செய்கின்ற நாடுகளுக்கு வருகின்ற நம்முடைய தமிழ்ப் பிள்ளைகளுக்கு நீங்கள் உற்றத்துணையாக இருந்து, அவர்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் ஒளியேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நீங்கள் அயல்நாடுகளில் வாழ்ந்தாலும், உங்களைத் தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், தமிழ் மக்களும் என்றைக்கும் மறக்கமாட்டர்கள். உங்களைப் போன்ற இன்னும் பல நூறு பொறியாளர்களை உருவாக்கவும், அப்படி உருவாக்குகின்ற பொறியாளர்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக (Entrepreneurs) உயர்த்தவும் நம்முடைய அரசு என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும். தமிழ்நாடும், தமிழ்ச்சமுதாயமும் செழிக்கட்டும். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தினுடைய பணிகள் அனைத்தும் சிறக்கட்டும் என்று சொல்லி, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சி.செல்வம், தலைவர் பி.கிருஷ்ணா ஜெகன், பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலைக்கழக தலைவர் டாக்டர் மன்சூர் அலாலி, குவைத் நாட்டின் பொது போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மன்சூர் அல் சையத், மாலத்தீவு குடியரசின் பொருளாதார மேம்பாட்டு முன்னாள் அமைச்சர் ஃபயஸ் இஸ்மாயில், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் டெக்டார் இன்டஸ்ட்ரீஸ், இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்டரக்சன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.லக்ஷ்மணன், உயர்கல்வித் துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர்,.., தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன்,இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்குக் கழக மேலாண்மை இயக்குநர் கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்பட அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.