Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 4 ஆண்டுகளில் 1,19,109 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்

*மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்

கரூர் : கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்ட செயல்பாடுகள் குறித்து ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எழுத்து மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினை தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாசித்தல் மற்றும் எழுத்துத் திறனை வளர்க்கும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பயிலும் பாடங்களை பொருள் புரிந்து படிக்கும் அளவிற்கு அடிப்படை எழுத்தறிவு திறனையும், எண் மதிப்பு அறிந்து அடிப்படை கணக்குகளை செய்யும் அளவிற்கு எண்ணறிவுத் திறனையும் பெறுவதை உறுதி செய்வதே எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் பயனைபெற வேண்டும் என்பதற்காக கடந்த 2023ம் ஆண்டு முதல் 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார்கள். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் முறை கரும்பலகை வடிவமாக இல்லாமல், மாணாக்கர்களுக்கு எளிமையாக புரியும் வகையிலும், விரும்பும் வகையிலும் செயல்வழி கற்றல் மூலம் பாடம் கற்பிக்கப்படுகின்றன.

அதாவது மாணாக்கர்களுக்கு பிடிக்கும் கார்ட்டூன் உள்ளிட்டவை மூலம் எழுத்துக்களை பொம்மைகளாக காட்டுவது, ஆடல் பாடல் என்று அவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை குறைவதுடன் மாணவர்களும் விரைவாக பாடங்களை எளிதாக புரிந்து கொண்டு எதிர்வினை ஆற்றுவார்கள்.

இந்த கற்பித்தல் முறை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு ஆகிய 3 பாடங்களில் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாடம் கற்பிக்கும் பயிற்சி நூலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கான விரிவான விளக்கங்களுடன் கூடிய ஆசிரியர் கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மாணவர்கள் திறனை வளர்க்கும் விதமாக அரும்பு, மொட்டு மற்றும் மலர் என்ற சிறப்பான கற்பித்தல் முறை பின்பற்றப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு குழந்தைகளையும் அரும்பு, மொட்டு மற்றும் மலர் என்ற 3 படிநிலைகளில் பிரித்து பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.‘அரும்பு’ என்ற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் உள்ள மாணவர்கள் படிக்கத்தொடங்காத அல்லது மிகக் குறைந்த அளவே எழுத்துக்களை அடையாளம் காணும் திறன் கொண்டவர்கள். ‘மொட்டு’ என்ற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்ள மாணவர்கள் ஓரளவு எழுத்துக்களை அடையாளம் காணவும், எளிய சொற்களைப் படிக்கவும் தெரிந்தவர்கள். ‘மலர்’ என்ற படிநிலையில் சரளமாக வாக்கியங்களை வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் உள்ள மாணவர்கள் நன்கு படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள 706 அரசுப்பள்ளிகள் மற்றும் 45 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 751 பள்ளிகள் மூலம் 1,19,109 மாணாக்கர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் இத்தகைய சிறப்பான திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய கல்வி திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, வட்டார கல்வி அலுவலர் பாண்டித்துரை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.