கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உயர்வுக்குபடி நிகழ்ச்சியை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
*மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உயர்வுக்குபடி நிகழ்ச்சியை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் உயர்வுக்குபடி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிப்பு படிப்பது தான் வாழ்க்கையில் முன்னேற்றம்.
வாழ்க்கையில் வேலை மட்டும் கிடையாது, பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்தது தான் வாழ்க்கை. மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த மாதிரியான சூழ்நிலை, பொருளாதாரம், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இன்றைக்கு எடுக்கிற முடிவு தான் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மாணவர்கள் ஐடிஐ, டிப்ளமோ, பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட படிப்புகளை முடித்து நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும்.
மேலும் பொருளாதார ரீதியாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் உயர்கல்வி பயில முடியாத காரணத்தினால் தான் மாணவர்கள் படிக்கும் போதே புதுமை பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில தகுதியுடைவர்கள். பாலிடெக்னிக் கல்லூரி முடித்த பின்பு மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும். பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் டயாலிசிஸ் டெக்னீசியன், இனஸ்தீஸியா டெக்னீசியன் போன்ற 6 பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புகளுக்கு இடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியின் இணையதளத்திலும், மருத்துவ கல்லூரியிலும் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ஆசனூர், சங்கராபுரம் போன்ற இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் மாணவர்கள் விருப்பத்தின்படி பாடப்பிரிவில் விண்ணப்பித்து படிக்க வேண்டும். நல்ல கல்வி பயின்றால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து நன்றாக படிக்க வேண்டும்.
எனவே மாணவர்கள் அனைவரும் கல்வியில் என்னென்ன திட்டங்கள் செயல்பட்டு வருகிறது என அறிந்து அதனை மாணவர்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.