சென்னை: மாணவர் சிறப்புப் பேருந்து திட்டத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பெண்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் போன்றே, நீண்ட தூரம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பொதுப் பேருந்துகளில் சந்திக்கும் நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக இயக்கும் பேருந்துகள் சேவையை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 25 அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பாகப் பயணிக்க 25 சிறப்புப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர் சமூகத்தினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் மாணவர் சிறப்புப் பேருந்து திட்டத்தை கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.