மதுக்கரை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 3 மாணவிகள் வெளியிட்ட ஆடியோ, வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகளிர் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதன்பின், போலீசார் வீடியோ வெளியிட்ட மாணவியின் தாயாரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,“ எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டேன். இனி அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் யாரும் தவறான கண்ணோட்டத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்” என்றார்.
ஆனாலும் வீடியோவில் உள்ள தகவல்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கிணத்துக்கடவு அரசு பள்ளியில் பணியாற்றும் இசை ஆசிரியர் செல்வராஜ், தாவிரவியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.