Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாணவர்களை பார்க்கும் போது உற்சாகம் அடைகிறேன் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கல்வி அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வி அவசியம் என கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 126 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் சான்றிதழ்களையும், 356 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். மேலும், கொளத்தூரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 200 நபர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை முதலமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனிதா அச்சீவர்ஸ் மூலமாக பலன் பெற்றிருக்கக்கூடிய இரண்டு சகோதரிகள் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார்கள். இன்னும் செய்ய வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். அதனால், நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன்.

என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்கும் பயிற்சி, ஒரு சிறிய துவக்கம்தான்.

இந்தப் பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய கதவை திறந்து வைக்கும் அவ்வளவுதான். ஆனால், அந்தப் பாதையில் நீங்கள் வெற்றிகரமாக நடைபோட வேண்டும் என்றால், கற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடக் கூடாது. இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்துகொண்டு வருகிறது.

அதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் அப்கிரேட் ஆகிக்கொண்டே வரவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து உங்கள் திறமையை மேலும், மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய ஆன்லைன் படிப்பு இருக்கிறது. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதைத் தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது.

படித்துவிட்டோம், வேலை கிடைத்துவிட்டது என்று இருந்துவிடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடர செய்யுங்கள். படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது.

கவர்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நீங்கள் நடைபோட வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்.

அதிலும் குறிப்பாக உங்கள் ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால்தான், நாம் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நம்முடைய ஒற்றுமையைக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் பிரகாஷ்,

ஆணையர் குமரகுருபரன், நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன், பெரியார் அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஹேமலதா, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* உயிர் இருக்கும் வரை கடமையை நிறைவேற்றுவேன்

நிச்சயமாக சொல்கிறேன். உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கும் வரையில் தலைவர் கலைஞர் கற்றுக்கொடுத்திருக்கும் அந்த உழைப்பு என்னுடைய உதிரத்தில் இருக்கும் வரையில் நிச்சயமாக உறுதியாக நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இருக்கிறேன். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னவோ தெரியவில்லை. கொளத்தூருக்கு வந்துவிட்டால் எனக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது.

* கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.