சென்னை: பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் 2 நாள் கலைப்பட்டறை பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இந்த திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மாணவர்களின் கலைத் திறனை வளர்க்கும் வகையில் இப்பட்டறை செயல்படும். போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்களை பாதுகாக்கத் தேவையான வாழ்வியல் திறன்கள் குறித்த அறிமுக அமர்வில் 50 ஆசிரியர்களும் 90 மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்த கலைப் பட்டறையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உள்ள போதை எதிர்ப்பு மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள முதன்மை பயிற்றுநர்களுக்கும் பயிற்சி அளித்து மாணவர்களுக்கு கலைப் பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படும். வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. இந்த கலைப்பட்டறை தொடங்கி வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு எப்படிப்பட்ட செயல்களை செய்ய வேண்டும் என்பதற்கு இந்த பயிற்சி பட்டறை உதவும். இதற்கு என்ன பயிற்சி தேவை, போதைக்கு அடிமை என்பதற்கு எதிரான கருத்துகளை உள்வாங்கி செயல்பட வேண்டும். இரண்டு நாட்கள் இந்த பயிற்சி நடக்கிறது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டில் சென்னையில் நமது முதல்வர் இது குறித்து பேசினார்.
அதன் தொடர்ச்சியாக போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. போதைக்கு அடிமையானவர்களை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாக இருக்கிறது. இதற்கான உறுதிமொழிகளையம் நமது பள்ளி மாணவர்கள் ஏற்றதுடன் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை நமது அரசு நிகழ்த்தியுள்ளது.
இந்த பயிற்சி அனைத்து பள்ளிகளுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மட்டும் அல்லாமல் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் என்று எல்லா தரப்பினரும் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். போதை ஒழிப்பை காவல் துறையினர் மட்டுமே செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் அந்த பொறுப்பு உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதைச் செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி பேசினார்.