திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 15 வயது மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள சீதத்தோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் (57). கூலித் தொழிலாளி. இந்தநிலையில் கடந்த 2019ம் ஆண்டு தன்னுடைய நண்பரின் மகளான 15 வயது சிறுமியை வீட்டில் வைத்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார்.
மிரட்டலுக்கு பயந்த சிறுமி பல மாதங்களாக இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து உள்ளார். நாளுக்கு நாள் மோகனனின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து சிறுமி தன்னுடைய தந்தையிடம் சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து சீதத்தோடு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் மோகனனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்தனம்திட்டா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோகனனுக்கு 55 வருடம் கடுங்காவல் சிறையும், ₹2.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.