மணப்பாறை : மணப்பாறை அடுத்த சின்னையா தெருவை சேர்ந்தவர் பட்டன். பாத்திர கடை வைத்தி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் மருதன்(எ) ராகுல்(17). இவர் ப்ளஸ் 1 படித்து வந்தார்.
இந்நிலையில், ராகுல் நேற்று மாலை, ஈஸ்வரன் கோயில் பகுதியினை சேர்ந்த தனது நண்பர்களான இருவர் மற்றும் காந்திநகர் பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவனுடன் சேர்ந்து, காரைமேட்டுப்பட்டி பகுதி அருகே ஜிஹெச்சிஎல் பஞ்சாலைக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது.
சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றுக்கு, கிணற்றை சுற்றி சுமார் 10 உயரத்திற்கு சுவர் அமைத்தும், அதற்கும் மேல் முள் கம்பி வேலி அமைத்தும், இரும்பு கதவுகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மில் நிர்வாகம் செய்துள்ள நிலையில், அடிக்கடி அங்கு செல்லும் சிறுவர்கள் கதவின் பூட்டுகளை உடைத்து வைப்பது வழக்கமாம். அவ்வாறு கதவுகள் திறந்து இருந்த கிணற்றுக்கு சிறுவர்கள் 4 பேரும் சென்ற நிலையில், கிணற்று நீரில் ராகுல் மூழ்கியுள்ளான்.
அதனைக்கண்ட ஈஸ்வரன் கோயில் பகுதியினை சேர்ந்த சிறுவர்கள் அங்கிருந்து பயந்து ஓடிய நிலையில், காந்திநகரை சேர்ந்த சிறுவன் மட்டும் தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவசர அழைப்பு 100-க்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு 20 அடி ஆழ தண்ணீரிலிருந்து ராகுலை சடலமாக மீட்டனர்.
சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடன் சென்ற சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.