Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவி தீக்குளித்து உயிரிழப்பு.. ஒடிசாவில் முழு கடையடைப்புப் போராட்டம்: எதிர்க்கட்சிகள் பேரணி!!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கல்லூரி உதவி பேராசிரியர் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.எட். படித்த 20 வயது மாணவி, கல்வியியல் துறைத் தலைவர் சமீரா குமார் சாகு தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கல்லூரியின் புகார் குழுவில் புகாரளித்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் கடந்த 12ம் தேதி நேரில் முறையிட்டார். அதன் பின்னர் கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்த மாணவி, 95 சதவீத தீக்காயத்துடன் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கடுமையான தீக்காயங்களுடன் 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்த மாணவி திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் தீக்குளிப்பு சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் சமீரா சாகு மற்றும் கல்லூரி முதல்வர் திலீப் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெறும் நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பேரணி, ரயில் மறியல், கடையடைப்பு போன்ற பல்வேறு வகையான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளனர்.