வாழ்க்கையில் முன்னேற முயற்சி மேற்கொள்ளும் போது முட்டுக்கட்டைகள் இடைமறிக்கும். தடைக்கற்கள் தடுமாறி விழச்செய்யும்.குறுக்கீடுகள் இடறிவிழ வைக்கும். எனினும் விழுந்தவன் எழுவான் என்ற மன உறுதியுடன் இருக்க வேண்டும். காற்றுள்ள பந்து கீழே விழுந்ததும் மேலே வீறுகொண்டு எழும். மனிதனும் அதுபோல எழ வேண்டும்.வாழ்வில் முன்னேற மட்டுமல்ல, நாம் எப்போதும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.இதற்காக பெரிய திட்டங்களை நம்பிக்கையுடன் சிந்தித்தால் போதும், பெரிய நம்பிக்கைகளை அடைய நமக்கு தடையாக இருப்பது நமது வாழ்க்கை சூழ்நிலை அல்ல. எதிர்மறைச் சிந்தனைகளையே தொடர்ந்து நினைப்பது தான். இதனால் தான் பயந்து கொண்டே இருந்தது நடந்துவிடுகிறது.இதற்கு மாறாக வெற்றியை பெரிய அளவில் கனவு கண்டு நடந்துவிடும் என்று நம்பிக்கை குறையாமல் மன உறுதியுடன் சிந்தித்தால் போதும் நிச்சயம் நல்லதே நடந்துவிடும்.தொடர்ந்து நல்ல எண்ணங்களையும், விரும்பும் வெற்றியையும் சிந்தித்தால் அவை உறுதியாக நிஜமாகிவிடும்.
ஒரு மன்னனுக்கு முனிவர் ஒருவர் பெட்டி ஒன்றைத் தருகிறார். எப்போது நெருக்கடி வருகிறதோ அப்போது அந்த பெட்டியைத் திறந்து பார்க்கும்படி முனிவர் கூறுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் வேற்றுநாட்டு படைகளிடம் தோல்வி அடைந்த மன்னர் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்படுகிறார். அவர் தனிமையில் அமர்ந்தபடி தன் வாழ்க்கையின் வீழ்ச்சி குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, முனிவர் கொடுத்த பெட்டி நினைவுக்கு வரவே, அந்த பெட்டியை ஆர்வத்துடன் திறந்து பார்க்கிறார். உள்ளே ஒரு வாசகம் ‘இதுவும் மாறும்’ அந்த வாசகத்தை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தார். இப்போதைய நிலை மாறும் என்ற அர்த்தம் புரிந்தது.அவருக்குள் இப்போது நம்பிக்கை வளர்ந்தது. அதனால் மன உறுதி பெற்றார். ரகசியமாகப் படையைத் திரட்டி, போரிட்டு மீண்டும் தன்னாட்டைக் கைப்பற்றினார். ஒரு வாசகம் தரும் மாபெரும் நம்பிக்கை, மன உறுதியை ஏற்படுத்தி மலையைக் கூட புரட்ட வைக்கும் என்பதை இந்தக் கதையின் மூலம் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் கஷ்டம் எப்போது நேரும் என யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கையை புரட்டிப் போடும் சிரமங்கள், கஷ்டங்கள் சிலருக்கு நேரும்.அப்படி தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை மன உறுதியால் வென்று விடாமுயற்சி யுடன் விஸ்வரூப வெற்றி பெற்ற சாதனை மங்கைதான் ஐரா சிங்கால். யூபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்து மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார் ஐரா சிங்கால்.
31 வயதாகும் மாற்றுத்திறனாளியான ஐரா, யூபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்று மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் நான் ‘மாற்றுத்திறனாளி அல்ல பலருடைய வாழ்க்கையை மாற்றும் திறனாளி’ என்று அசத்தலான சாதனைக்குச் சொந்தக்காரராகி உள்ளார். 31 வயதாகும் ஐரா சிங்கால் இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) அதிகாரி ஆவார்.ஆனால், இந்தப் பதவியைப் பெற இவர் பல்வேறு சட்டச் சிக்கல்களை ஆரம்ப காலத்தில் எதிர்கொண்டார். மாற்றுத் திறனாளியாக இருந்ததால் பல சிக்கல்களுக்கு ஆளானார். அண்டை வீட்டாரின் கேலி, உடன் படித்தவர்களின் கிண்டல்களால் சிக்கி துவண்டார். இருந்தபோதும் மனம் தளறவில்லை. நீ ஒரு மாற்றுத் திறனாளி. உன்னால் தனியாக நிற்கக்கூட முடியாது. துப்புரவுத் தொழிலாளியாக இருக்கக் கூட லாயக்கில்லை என்ற சொற்களைக் கேட்டவர். ஆனாலும் அசராத மன தைரியத்தால் இன்று யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்று முத்திரை பதித்தவர் ஐரா.டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர சிங்கால், அனிதா சிங்கால் தம்பதியின் ஒரே மகள் ஐரா சிங்கால். லாரென்டோ கான்வென்ட் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முடித்த ஐரா, தௌலா கானில் உள்ள ராணுவப் பள்ளியில் 12-ஆம் வகுப்பை முடித்தார். இதையடுத்து, நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.இ (கணினிப் பொறியியல்) பட்டப் படிப்பு முடித்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ (விற்பனை, நிதி) முதுகலைப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றவர்.
அதன் பிறகு வேலைக்கு செல்ல முயற்சித்தார், எந்த வேலையும் கிடைக்கவில்லை, உடல் நலத்தை காரணம் காட்டி வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.இருந்தபோதும் தொடர் முயற்சியால், 2008 முதல் 2010 வரை காட்பரி இந்தியா நிறுவனத்தில் வாடிக்கையாளர் மேம்பாடு அதிகாரியாகப் பணியாற்றினார். முதுகுத்தண்டு வளர்ச்சி குறைபாட்டால் பிறவியிலேயே பாதிக்கப்பட்ட இவருக்கு அரசுப் பணியில் சேர வேண்டிய ஆர்வம் சிறு வயதிலிருந்தே உள்ளது. அதனால் பட்டப்படிப்பு முடித்தது, மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையமான(யுபிஎஸ்சி) தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தார்.2010-இல் நடந்த தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் பணியை இவருக்கு வழங்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மருத்துவத் தகுதிப் பரிசோதனைக்கு இவர் உள்படுத்தப்பட்டார். அப்போது இவருக்கு பல்வேறு சோதனைகள் வந்தன.மாற்றுத்திறனாளியாக இருந்த ஐரா சிங்கால் வெறும் 4.5 அடி மட்டுமே உயரம் இருப்பதால் அவரால் ஐஆர்எஸ் பணியை செய்ய முடியாது என்று கூறி அவருக்குப் பணி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.இதனால் கடும் வருத்தம் அடைந்த ஐரா, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதையடுத்து, 2013-இல் ஐஆர்எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் மத்திய சுங்கத் துறையில் உதவி ஆணையராகத் தற்போது டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
அரசுப் பணிக்கு வரும் முன்னதாகவே தனது உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் ஐரா. கால்பந்துப் போட்டியில் அதிக ஆர்வமுடையவர். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றே என்ற தாரக மந்திரம் கொண்டவர். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொல்லை அடிக்கடி சொல்லிக் கொள்வாராம்.ஆங்கிலம், ஹிந்தி மொழி மட்டுமன்றி ஸ்பெயின் நாட்டின் ஸ்பானிஷ் மொழியையும் சரளமாகப் பேசும் திறனைப் பெற்றுள்ள ஐரா சிங்கால். பன்முகத் திறமையாளராக திகழ்ந்துகொண்டிருக்கின்றார்.இவர் வாழ்வில் நடந்தது போல, வேறு யாருக்காவது நடந்திருந்தால், கஷ்டத்தின் சுவடுகளில் வருந்தி வீட்டின் மூலையில் முடங்கிப் போய் இருப்பார்கள். ஆனால் கஷ்டத்தைக் கடந்து கனவுகளை நோக்கி பயணித்து சாதித்த சாதனை மங்கைதான் ஐரா சிங்கால். மனஉறுதியும், நம்பிக்கையும் உள்ளவர்கள் எப்போதும் தோற்றுப் போனதில்லை, அது மட்டுமல்ல அவர்கள் பெறக்கூடிய வெற்றியும் விஸ்வரூப வெற்றியாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.